தயார்நிலை தேசிய சேவையாளர் (ரிசர்விஸ்ட்) சேவையின் இறுதி நாளை தமது நண்பர்களுடன் கொண்டாடிய 27 வயது எமிலியோ அல்போன்சோ கான்சேல்ஸ் மது குடித்துவிட்டு காரை ஓட்டியுள்ளார்.
தமது உறவினரின் காரை எடுத்துக்கொண்டு புக்கிட் தீமா சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆடவர் மது போதையில் தூங்கிவிட்டார்.
அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சிக்ஸ்த் அவென்யூ ரயில் நிலையம் அருகே இருந்த சாலையோரத் தடுப்புகள் மீது ஏறியது.
விபத்தைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், காரில் ஆடவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டனர். அதைத் தொடர்ந்து அவரிடம் மதுபோதைக்கான மூச்சுக்காற்று பரிசோதனை எடுக்கப்பட்டது.
அதன் பின்னர் எடுக்கப்பட்ட மற்ற பரிசோதனைகளில் கான்சேல்ஸ் அதிக அளவில் மது குடித்திருந்தது நிரூபணமானது.
இச்சம்பவம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி பின்னிரவு நடந்தது என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கான்சேல்ஸ் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆடவருக்கு 12 நாள் சிறைத் தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவர் 3 ஆண்டுகள் வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்திய கான்சேல்ஸ் சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.