தான் ஓட்டிச்சென்ற ‘மெர்செடிஸ் பென்ஸ்’, பாதசாரி ஒருவர் மீது மோதி அந்தரத்தில் அவர் தூக்கி எறியப்பட்டதை அடுத்து வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார்.
அத்துடன் ஆதாரங்களைக் கழித்துக்கட்ட 37 வயது கோ சியூ வா, தனது காரைப் பழுதுபார்ப்புக்காக அனுப்பி இருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
விபத்து நடந்த அதே நாளான 2022ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி, 26 வயது திரு டவின் இங் மின் யு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் அப்போது கேகே மகளிர், சிறார் மருத்துவனையின் மருந்தாளராகப் பணியாற்றி வந்தார்.
கவனக்குறைவாக வாகனமோட்டி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருத்தல், விபத்துக்குப் பிறகு உதவி வழங்கத் தவறுதல், நீதித் துறை தனது கடமையைச் செய்ய இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து கோவுக்கு டிசம்பர் 18ஆம் தேதி ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலையான பிறகு எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டும் தடையும் கோவுக்கு விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, விபத்து நேர்வதற்கு ஒரு மாதம் முன்னரே வேக வரம்பை மீறியதற்காக கோவுக்கு $500 அபராதமும் 12 தண்டனைப் புள்ளிகளும் வழங்கப்பட்டதாக அரசாங்கத்தரப்பு சுட்டியது.
கோ தனது வாகனத்தை சிம் லிம் டவரிலிருந்து ராபின்சன் ரோட்டில் உள்ள ஒரு மதுவிடுதிக்கு நள்ளிரவு வாக்கில் ஓட்டிச்சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவுடன் அவரின் நண்பர் ஒருவர் காரின் முன்பக்க பயணி இருக்கையில் இருந்தார்.
இருப்பினும், சர்ச் ஸ்திரீட் வழியாக செசில் ரோட்டை நோக்கி ஓட்டிய கோ, அங்கு சாலைச் சந்திப்புக்கு அருகே அனுமதிக்கப்படாத இடத்தில் திரு இங் சாலையைக் கடப்பதைக் கவனிக்கவில்லை.
கோவின் வாகனம் வருவதைப் பார்த்ததும் திரு இங் சாலை குறுக்கே வேகமாக ஓடுவதைக் காட்டும் காணொளி ஒன்று நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. ஆனால், அதற்குள் திரு இங் மீது கோ மோதி பல மீட்டர் தொலைவில் சென்று திரு இங் விழுந்தார்.
தொடர்புடைய செய்திகள்
விபத்து நிகழ்ந்த சமயத்தில் வேக வரம்பான மணிக்கு 50 கிலோமீட்டருக்குப் பதிலாக கோ 70 முதல் 97 கிலோமீட்டருக்கு வாகனத்தை ஓட்டியதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.
“மோதலால் ஏற்பட்ட தாக்கத்தை, உயிரிழந்த திரு இங் அந்தரத்தில் ஒரு பொம்மையைப் போல் தூக்கி எறியப்பட்டு பின்னர் மீண்டும் சாலையில் விழுந்து உயிரற்றுக் கிடப்பதை உணர முடிகிறது,” என்றார் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மண்டை ஓடு, கால் முறிவுகளுடன் சேர்க்கப்பட்ட திரு இங் மூளையில் ஏற்பட்ட கடுங்காயத்தால் உயிரிழந்தார்.
விபத்து இடத்திலிருந்து தப்பிச் சென்ற கோ, அதே நாளன்று பகலில் காரை பழுதுபார்ப்புக்காக அனுப்பினார்.

