வாக்குவாதம் ஏற்பட்டபோது குடிபோதையில் ஆடவர் ஒருவர் இன்னொருவரை முகத்தில் குத்தியதால் தாக்குதலுக்கு ஆளான நபர் ஒரு கண் பார்வையை இழக்க நேரிட்டது.
இந்தச் சம்பவம் இவ்வாண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்தது.
தாக்குதலை நடத்திய 23 வயது வான் ஃபயீஸ் வான் ஹவிஸ் என்ற ஆடவர் கைது செய்யப்பட்டு பின்னர் அதே மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் மார்ச் மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வான் ஃபயீஸ் மோசடிகளில் தான் சம்பாதித்து தனது ஐந்து வங்கிக் கணக்குகளில் இருக்கும் $493,000ஐ மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பின்னர் தமது வங்கிக் கணக்குகளைக் காண்பித்த மற்றவர்கள் மூலமாகவும் வான் ஃபயீஸ் மோசடிகளின்வழி பணம் பெற்றார்.
இந்தப் பணத்தில் $246,000க்கும் மேற்பட்ட தொகை எளிதில் பாதிக்கப்படக்கூடிய, 60 வயதைத் தாண்டிய நபர்களிடம் இருந்து பெற்றது.
இதுபற்றிய தகவல்களை பெயர் தெரியாத நபர்களுக்கு அளித்ததில் ஃபயீஸ் மேலும் $5,200 பெற்றார் என்று அரசு துணை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஃபயீஸுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10ஆம் தேதி) இரண்டு ஆண்டு, மூன்று மாதம், இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் $5,200 அபராதமும் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் அவர் மேலும் 21 நாள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

