$3 பில்லியன் பணமோசடி வழக்கில் குற்றவாளியின் மூத்த சகோதரருக்குச் சிறை

$3 பில்லியன் பணமோசடி வழக்கில் குற்றவாளியின் மூத்த சகோதரருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 10:16 pm

2 mins read

சிங்கப்பூரில் $3 பில்லியன் மதிப்பிலான பணமோசடி தொடர்பில் பிடிபட்ட 10 வெளிநாட்டவரில் ஒருவரின் மூத்த சகோதரருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சாங் ருய்‌ஷெங் என்ற 54 வயது ஆடவர், பணமோசடியின் மூலம் பெறப்பட்ட $17 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வைத்திருந்த குற்றத்தை எதிர்கொண்டார்.

ருய்‌ஷெங், 47 வயது சாங் ருய்ஜின்னின் மூத்த சகோதரர்.

ருய்‌ஷெங், 69 கோவ் டிரைவ் பகுதியில் உள்ள சொத்துடன் டொயோட்டா வெல்ஃபயர் வாகனத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டார்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் அதே ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் இடையே 11 பரிவர்த்தனைகள் மூலம் சிஐஎம்பி கணக்கில் $17.6 மில்லியன் தொகையை ருய்‌ஷெங் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

வங்கிக் கணக்கைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குள் முதல் பரிவர்த்தனை இடம்பெற்றிருந்தது.

குற்றம் புரியப்பட்டபோது, கோல்டன் ஈகல் ஃபேமிலி அலுவலகத்தால் வேலை நியமன ஆலோசகராகப் பணியமர்த்தப்பட்ட ருய்‌ஷெங், சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டையின்கீழ் இருந்தார்.

ருய்ஜின்னும் அவரது 46 வயது மனைவி லின் பாவ்யிங்கும் அந்தக் குடும்ப அலுவலகத்தின் இயக்குநர்களாக இருந்தனர்.

கணக்கில் வந்த பணம் குறித்து சிஐஎம்பி வங்கி விசாரித்தபோது மக்காவில் $14.3 மில்லியனுக்கு விற்ற சொத்து மூலம் அந்தத் தொகை வந்ததாக ருய்‌ஷெங் கூறினார்.

மேலும், 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி போலியான கடன் ஒப்பந்தம் ஒன்றையும் அவர் சமர்ப்பித்தார்.

அதையடுத்து 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிஐஎம்பி ருய்‌ஷெங்கின் வங்கிக் கணக்கை ரத்து செய்ய முடிவெடுத்தது.

அதற்கு முன், ரு‌ய்‌ஷெங், கணக்கிலிருந்த கிட்டத்தட்ட $5 மில்லியனை எடுத்து செந்தோசா கோவ்வில் உள்ள சொத்தை வாங்க கிட்டத்தட்ட 20 விழுக்காட்டை முன்பணமாக வைத்தார்.

பணமோசடிக் கும்பல் குறித்த விசாரணை சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. ருய்‌ஷெங்கும் அதே நாளில் விசாரிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்