தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈசூன் காப்பிக்கடையில் காவல்துறை அதிகாரியைக் கடித்த மூதாட்டிக்குச் சிறை

2 mins read
358ed667-5a90-4f61-b09f-4d6dcc22abeb
காவல் அதிகாரியின் கையில் காயம் ஏற்பட்டது. - படம்: நீதிமன்ற ஆவணங்கள்

ஈசூனில் உள்ள காப்பிக்கடை ஒன்றில் காவல்துறை அதிகாரியைக் கடித்த 77 வயது மூதாட்டிக்கு டிசம்பர் 17ஆம் தேதியன்று 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 15ஆம் தேதியன்று புளோக் 848 ஈசூன் ஸ்திரீட் 81ல் உள்ள சாங் செங் மீ வா காப்பிக்கடையில் சிங்கப்பூரரான திருவாட்டி கோ சு சிங் தமது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தார்.

பொது இடங்களில் இரவு 10.30 மணியிலிருந்து காலை 7 மணி வரை மதுபானம் அருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் காப்பிக்கடையில் மதுபானம் குடித்தே தீருவோம் என்று மூவர் பிடிவாதம் பிடித்ததாக ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 11.50 மணி அளவில் பொதுமக்களில் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழித்து, அந்தக் காப்பிக்கடையை அதிகாரிகள் அடைந்தனர்.

அப்போது கோவும் அவரது இரு நண்பர்களும் மதுபானம் அருந்திகொண்டிருந்தனர்.

அந்த மூவரையும் அதிகாரிகள் அணுகி மதுபானம் அருந்துவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

அதிகாரிகள் கூறியதைக் கேட்டு கோவின் இரு நண்பர்களும் மதுபானம் தங்கள் மதுபானக் குவளைகளைக் கீழே வைத்தனர்.

ஆனால், காவல்துறை அதிகாரிகள் கூறியதை கோ புறக்கணித்தார்.

அவர் தொடர்ந்து மதுபானம் அருந்த முயன்றார்.

அப்போது அதிகாரி ஒருவர், அவரது மதுபானக் குவளையை அவரிடமிருந்து எடுக்க முற்பட்டார்.

ஆனால் கோ விடவில்லை.

மாறாக, அந்த அதிகாரியின் கையைக் கடித்தார்.

இதனால் அந்த அதிகாரிக்கு காயம் ஏற்பட்டது.

கைது செய்ய வந்த அதிகாரிகளுடன் முரண்டுபிடித்து அங்கிருந்து நடந்துசெல்ல கோ முயன்றார்.

ஆனால் ஒருவழியாக, அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

காயமடைந்த அதிகாரி கூ டெக் புவாட் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டார்.

அவருக்கு ஒருநாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்தை கோ ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்