மனிதவள அமைச்சில் தீர்வை நிர்வாக மேலாளராகப் பணிபுரிந்த தினத் செல்வமணி முதலியார், தனது சக ஊழியர்களின் சம்பள விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
தன்னுடைய சம்பளத்தின் அடிப்படையில் அமைச்சில் தனது நிலை என்னவென்று அறிய அவர் நினைத்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்காக, டிபிஎஸ் வங்கியில் வசூல் அதிகாரியாகப் பணிபுரிந்த லியோங் யான் சின் என்பவரை தினத் அணுகினார். அவருக்கு உதவிசெய்ய சம்மதித்த லியோங், வங்கியின் கணினியகத்தில் பலமுறை அனுமதியின்றி தேடல் மேற்கொண்டு, சம்பள விவரங்களை வாட்ஸ்ஆப் மூலம் தினத்திடம் தெரிவித்தார்.
இந்தக் குற்றத்திற்காக 35 வயது தினத்துக்கு வியாழக்கிழமை ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீதான எட்டு குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
லியோங் இப்போது டிபிஎஸ் வங்கியில் வேலை செய்யவில்லை. அவருக்கு 2022 நவம்பர் மாதம் 16 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லியோங் தேடல் மேற்கொள்ள உதவிபுரிந்த ஆங் கொக் யாவ் என்பவருக்கு இவ்வாண்டு மே மாதம் இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தினத், மனிதவள அமைச்சில் சேர்வதற்குமுன், வங்கியில் லியோங்குடன் வேலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மனிதவள அமைச்சில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, 2018 ஜூன் மாதம் சக ஊழியர்களின் சம்பள விவரங்களைத் தெரிந்துகொள்ள லியோங்கின் உதவியை தினத் நாடினார்.
தினத்துக்கு நீதிமன்றம் $15,000 பிணை வழங்கியது. அவர் செப்டம்பர் 22ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற அரசு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டது.

