ஃபேர்பிரைஸ் ஊழியர்களுக்குக் குறைந்தது $220,500 லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மீன் மொத்த விற்பனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு வெள்ளிக்கிழமை 15 மாதங்கள் சிறைத்தண்டனை வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
‘நாம் சூன் சின் கீ அண்ட் கோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 59 வயது இங் கெங் மெங் இந்தக் குற்றத்தை 2013க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்தார். ஃபேர்பிரைஸ் பேரங்காடியுடன் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக அவர் லஞ்சம் கொடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒரு வேனை ஆபத்தான முறையில் ஓட்டிச்சென்று இருவரைக் காயப்படுத்திய வேறொரு குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தது. அதற்காக அவருக்குக் கூடுதலாக மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தப் போக்குவரத்து குற்றத்திற்காக, லிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஈராண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கவோ பெறவோ முடியாது எனக் கூறப்பட்டது.
$90,000 சம்பந்தப்பட்ட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஜூலை மாதம் ஒப்புக்கொண்டார்.
எஞ்சிய $130,500 சம்பந்தப்பட்ட மேலும் ஆறு குற்றச்சாட்டுகளை நீதிபதி தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொண்டார்.
லஞ்ச ஊழலுடன் தொடர்புடைய ஃபேர்பிரைஸ் ஊழியர்கள் இருவருக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
மொத்தம் 12 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 48 வயது லிம் கியன் கொக் என்பவருக்கு இவ்வாண்டு மார்ச் மாதம் நாலாண்டும் ஐந்து மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் மூத்த அணித் தலைவராக வேலை செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
இன்னொரு ஃபேர்பிரைஸ் அணித் தலைவரான 70 வயது சீ ஹாக் லாமுக்கு மூவாண்டும் இரண்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்விருவரும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் வாங்கியிருந்தனர். அந்தப் பணத்தைச் சமமாகப் பிரித்து, ஆளுக்கு $261,500 எடுத்துக்கொண்டனர்.
லஞ்சம் கொடுத்த நிறுவனங்களிலிருந்து இருவரும் அதிக அளவில் மீனும் கடலுணவும் வாங்கினர். லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு 2020 செப்டம்பர் மாதம் விசாரிக்கத் தொடங்கும்வரை இந்த ஊழல் தொடர்ந்தது.