ஏறக்குறைய $61,000 கையாடிய முன்னாள் சமய ஆசிரியருக்குச் சிறை

1 mins read
556b25eb-2907-4e3b-8bd2-95381382e11b
ரஸ்மான் சரிடின் திருட்டு உள்ளிட்ட மற்ற குற்றங்களுக்காக முன்னதாகச் சிறையில் அடைக்கப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பலரிடமிருந்து ஏறக்குறைய $61,000 கையாடிய முன்னாள் சமய ஆசிரியருக்கு 11 மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஸ்மான் சரிடின், 56, போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவர் என்றும் மீண்டும் மீண்டும் குற்றம் புரிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அண்மையில் ரஸ்மானால் ஏமாற்றப்பட்டோரில், சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ‘உம்ரா’ புனித யாத்திரை மேற்கொள்வதற்கான பயண ஏற்பாடு செய்து தருவதற்காக $33,000 ரொக்கம் வழங்கியோரும் அடங்குவர்.

அத்துடன், இந்தோனீசியப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வியில் மூவாண்டுகால முனைவர் பட்டப்படிப்புக்கு ஐந்து சிங்கப்பூரர்கள் அவரிடம் செலுத்திய $27,900யும் ரஸ்மான் கையாடினார்.

இதற்கிடையே, அவர் உரிமமின்றி பயண முகவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் மொத்தம் $79,500 ஈட்டினார். பயண முகவர் சட்டத்தின்கீழ் அது குற்றச்செயலாகும்.

ஜூலையில் அவர் ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது மேலும் 17 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

செவ்வாய்க்கிழமை ரஸ்மான் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அக்டோபர் 3ஆம் தேதி தனது தண்டனையை நிறைவேற்ற அரசு நீதிமன்றத்தில் சரண் அடையுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்