மதுபோதையில் காரோட்டிய குற்றத்திற்காக 39 வயது ஆடவர் ஒருவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை, $7,000 அபராதம் ஆகியவற்றுடன் மூன்றாண்டுகளுக்கு எந்தவித வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மெங் ஸியாங்லெய் எனப்படும் அந்த ஆடவர், கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஜூரோங் வர்த்தக மையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தமது நண்பர்களுடன் மது அருந்தினார்.
அதன் பின்னர், அவர் மதுபோதையுடன் 20 கிலோமீட்டருக்கும் மேல் கார் ஓட்டியவாறே கேலாங் சென்றார். அங்கு மீண்டும் அவர் மது அருந்தினார்.
பின்னிரவு 2.30 மணியளவில் அங் மோ கியோவில் உள்ள தமது வீட்டுக்குச் செல்ல அவர் மீண்டும் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றார்.
செல்லும் வழியில், சோமர்செட் ரோடு ஓரமாகக் காவல்துறை வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனத்துடன் மெங்கின் கார் மோதியது.
அதனால், காவல்துறை வாகனத்தின் இடது பின்புறம் சேதமடைந்தது. காவல்துறை அதிகாரிகள் வேறோர் அவசரச் சம்பவம் தொடர்பாகச் சென்றுவிட்டதால் அந்த வாகனத்தில் யாரும் இல்லை.
காவல்துறை வாகனத்தைப் பழுதுபார்க்கத் தேவையான $2,300 செலவை மெங் ஏற்றுக்கொண்டார்.