தகுந்த உரிமம் இல்லாமல் சட்டவிரோத கடன் சேவை வழங்கும் குழுவில் இருந்த சிங்கப்பூர் ஆடவருக்கு நான்கு ஆண்டுகள் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங் குவோங் செங் என்னும் அந்த 44 வயது ஆடவர் அந்தக் குழு மூலம் கிட்டத்தட்ட 500,000 வெள்ளி லாபம் ஈட்டியுள்ளார். அந்த லாபத்தை அவர் 2006ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பெற்றுள்ளார்.
மேலும் இங் அபராதமாக 495,000 வெள்ளி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை செய்யாவிட்டால் ஆடவர் கூடுதலாக 33 வாரங்கள் சிறையில் அடைக்கப்படுவார்.
ஜூன் 12ஆம் தேதி தம்மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை இங் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ஆடவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இங் இருந்த குழு சீனாவில் இருந்து செயல்படும் சட்டவிரோத குழு. அது சிங்கப்பூரிலும் சட்டவிரோதமாக கடன்களை வழங்கியுள்ளது.
இங் சீனாவில் உள்ள அந்தக் குழுவிடம் 2006ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். அதன் பின்னர் சிங்கப்பூரில் கடன்கள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.
குழுவின் முக்கிய உறுப்பினர் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கடன் சேவைகளை இங் நிறுத்தினார். அதன் பின்னர் சீனாவில் வேறு ஒரு நிறுவனத்தில் அவர் 2023 ஜூன் மாதம் வரை அவர் வேலை செய்தார்.
சிங்கப்பூருக்கு கடந்த நவம்பர் மாதம் இங் வந்தபோது விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.