லஞ்சம் வாங்கிய மாதிற்குச் சிறை, அபராதம்

லஞ்சம் வாங்கிய மாதிற்குச் சிறை, அபராதம்

2 mins read
432453a0-77bd-4dd5-8aaf-9d8d7c52ae1c
நோர்ஹைனி அப்துல் மஜிட் தன்மீதான நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘விகோம்’ வாகனச் சோதனை நிறுவனச் சேவை ஆலோசகர் ஒருவர், 2016-2020 காலகட்டத்தில் பழுதுபார்ப்புப் பட்டறைகளுடன் தொடர்புடையவர்கள் உட்பட பலரிடமிருந்து $2,170 லஞ்சம் பெற்றார்.

நோர்ஹைனி அப்துல் மஜித், 40, என்ற மாதின் குற்றங்களால் பல பட்டறைகளின் வாடிக்கையாளர்கள் விபத்து குறித்து புகார் செய்ய, தங்களின் வாகனங்களை ‘விகோம்’ நிறுவனத்திற்குக் கொண்டுசெல்லவில்லை.

அவரின் செயல்களால் அந்நிறுவனத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட பழுதுபார்ப்புப் பட்டறைகள், தங்களது போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் சௌகரிய அடிப்படையில் பலன்பெற அவை உதவின என்று அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் லியோங் கிட் யூ கூறினார்.

இந்நிலையில், தன்மீதான $1,870 சம்பந்தப்பட்ட நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளை நோர்ஹைனி திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனையும் $5,870 அபராதமும் விதிக்கப்பட்டன.

விபத்துகளில் சிக்கும் வாகனமோட்டிகள் தங்கள் வாகனங்களை ஒப்புதல் பெற்ற புகார் நிலையத்திற்கு அல்லது அனுமதி பெற்ற பழுதுபார்ப்புப் பட்டறைக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய ஒப்புதல் பெற்ற புகார் நிலையங்களில் ஒன்று ‘விகோம்’.

லிங் சியூ இங், 56, டோக் சிங் சிம், 60, தோ லே சுவீ, 64, ஆகியோருக்கும் நோர்ஹைனியின் குற்றங்களில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீதான வழக்கு தொடர்கிறது.

குற்றம் நடந்த காலத்தில், தோ, ‘தோ பெயின்டிங் அண்ட் சர்விசஸ்’ (டிபிஎஸ்) நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தோவும் நோர்ஹைனியும் அறிமுகமாயினர். டிபிஎஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு விபத்து குறித்து புகார் செய்ய நோர்ஹைனி உதவுவார் என்று தோ தன் மகளிடம் கூறினார். அதற்கு வாடிக்கையாளர்களோ தங்கள் வாகனங்களோ ‘விகோம்’இல் இருக்கவேண்டிய தேவையில்லை.

புகார் செய்வதற்குத் தேவையான விவரங்களை தோவின் மகள் நோர்ஹைனிக்குக் கொடுத்தார். நோர்ஹைனி அந்தப் புகார்களை மின்பதிவுமுறை மூலம் சமர்ப்பித்தார். அதற்கு வெகுமதியாக, அவர் தோவின் மகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்