சமூக சேவை அமைப்பு ஒன்றில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றிய பெண் ஒருவர், மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தள்ளிவிட்டதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
அந்தக் குற்றத்திற்காக 21 வயதான நூர் அமீரா ஷாஹிரா அஸ்மி என்னும் அந்த முன்னாள் அதிகாரிக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) 14 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை கடந்த ஜூலை மாதம் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற உத்தரவு காரணமாக, சம்பவம் நடந்த இடம் மற்றும் பாதிக்கப்பட்டவரைப் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது.
தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன், 2024 ஆகஸ்ட் 30ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணும் மற்றோர் ஆண் பயனாளியும் மதிய உணவைப் பெறுவதற்காக ஓர் அறையில் அமர்ந்திருந்தனர்.
மற்ற பயனாளிகள் சுயசார்புடையவர்களாக மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்ததாக, இதற்கு முன்னர் நடைபெற்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
மதிய உணவு வாங்குவதற்கான முறை வந்தபோது, ஆண் பயனாளியை கதவை நோக்கி அழைத்துச் செல்வதற்காக பாதிக்கப்பட்ட பெண் தன் கையை நீட்டினார். அப்போது பயிற்சி அதிகாரிகளில் ஒருவர், அவருக்கு உதவி செய்ய வேண்டாம் என்று அப்பெண்ணுக்கு நினைவூட்டினார்.
தன் சக ஊழியர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசுவதை அமீரா தற்செயலாகக் கேட்டார். அறிவுரைகளைப் பின்பற்றாததால் பாதிக்கப்பட்ட பெண் மீது அமீரா கோபமடைந்தார்.
அதனால், பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி வேகமாகச் சென்று அவரைத் திட்டினார். மேலும் தம் வலது கையால் அந்தப் பெண்ணின் தோள்பட்டையைப் பலமாகத் தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து தரையில் மோதினார்.
தரையில் விழுந்து அவர் அழுதுகொண்டிருந்தபோதும், அமீரா அவரைத் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் பிற்பகுதியில், பாதிக்கப்பட்டவரால் தாமாக நிற்கவோ நடக்கவோ முடியவில்லை என்பதை மற்ற பயிற்சி அதிகாரிகள் கவனித்தனர்.


