தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$124,000க்கும் அதிக மதிப்பில் தங்கத் தகடுகளைத் திருடிய நகைக்கடை ஊழியருக்குச் சிறை

2 mins read
$20,000 ரொக்கத்தையும் களவாடினார்
cdb7a3e0-6aa3-41a6-b22f-222ec2934f09
சாவ் டாய் ஃபுக் நகைக்கடையிலிருந்து தங்கத்தையும் ரொக்கத்தையும் டான் திருடினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பூகிஸ் ஜங்‌‌ஷன் கடைத்தொகுதியில் $124,000க்கும் அதிகமான மதிப்புடைய தங்கத் தகடுகளைத் திருடிய ஊழியருக்கு (மார்ச் 14) 20 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயது ஜேக்கி டான் ஜுன் ஜியே $20,000 ரொக்கத்தையும் களவாடியதை ஒப்புக்கொண்டார்.

கடன்காரர்களுக்கும் கடன்முதலைகளுக்கும் பணத்தைத் திரும்பத் தருவதற்காக டான் திருடியதாகக் கூறப்படுகிறது.

சாவ் டாய் ஃபுக் நகைக்கடையில் வேலை செய்த டானுக்கு சூதாட்டப் பழக்கம் உண்டு.

இணையத்திலும் சூதாடும் டான் உரிமம் பெற்ற கடன்காரர்களிடமிருந்தும் கடன் முதலைகளிடமிருந்தும் 2023ஆம் ஆண்டிலிருந்து கடன் வாங்கத் தொடங்கினார்.

கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில் வேலைக்கு வந்த டான் கடையில் உள்ள பணப் பெட்டி திறந்திருந்ததைக் கண்டார்.

ஒரு மணி நேரத்துக்குப் பின் உடல்நலம் சரியில்லை என்று கூறி சக ஊழியரைக் காசாளர் வேலையைச் செய்யும்படி டான் கூறினார்.

அப்போது கடையிலிருந்த ரொக்கத்தையும் விலைமதிப்புள்ள பொருள்களையும் திருட டான் திட்டமிட்டதாகத் தெரிகிறது.

மாலை சுமார் 5.20 மணியளவில் கடையிலிருந்து 20 தங்கத் தகடுகளையும் பாதுகாப்புப் பெட்டியிலிருந்த $20,000 ரொக்கத்தையும் டான் திருடினார்.

அது கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

பிடோக் நார்த்தில் 10 தங்கத் தகடுகளை கிட்டத்தட்ட $48,000க்கு டான் அடகுவைத்தார்.

பின் கடன்காரர்களிடம் ஏறக்குறைய $68,000 ரொக்கத்தைக் கொடுத்த டான், கையிலிருந்த 10 தங்கத் தகடுகளை ‘ஆ வீ’ என்ற கடன் முதலையிடம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

டான் $3,000 வெள்ளி ரொக்கத்தை மனைவியிடம் கொடுத்து $4,000 வெள்ளியைச் சொந்த வங்கிக் கணக்கில் போட்டதையும் குறிப்பிட்டார்.

மாலை சுமார் 7.30 மணிவாக்கில் தங்கத் தகடுகளையும் ரொக்கத்தையும் காணவில்லை என்று கடையின் ஊழியர்கள் கண்டுபிடித்ததை அடுத்து இரவு 9 மணிவாக்கில் டான் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்