பாலியல் துன்புறுத்தலை மறைத்த பாலர் பள்ளி உயரதிகாரிகளுக்குச் சிறை

1 mins read
1b0781e4-1467-4072-9392-e16cc48b7c28
மூன்று பெண்களும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். - படம்: பிக்சாபே

பாலர் பள்ளியில் பயின்ற இரண்டு வயதுச் சிறுமியை அப்பள்ளியில் சமையல் பணியாளராகப் பணியாற்றியவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.

அவருடைய அச்செயலை மறைத்த அப்பள்ளியின் துணை முதல்வருக்கு மூன்று மாதங்கள், இரு வாரங்கள் சிறைத் தண்டனையும் நிர்வாக இயக்குநருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும் திங்கட்கிழமையன்று (ஜனவரி 19) விதிக்கப்பட்டது.

குழந்தைகளைத் தீங்கிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவ்விரு பெண்களும் குற்றத்திற்குத் துணையாக நின்றனர் என்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான காணொளிக் காட்சிகளை நீக்குவதில் அவர்கள் ஈடுபட்டனர் என்றும் நீதிபதி கூறினார்.

மேலும், அச்செயல் குழந்தைகளைப் பாதுகாப்பார்கள் எனச் சமூகம் அவர்கள்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதாக அவர் சாடினார்.

பாலியல் துன்புறுத்தல் குறித்த தகவல்களை வேண்டுமென்றே மறைத்த குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அப்பள்ளியின் 62 வயது முதல்வருக்கு மார்ச் மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மூன்று பெண்களும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

பாலர் பள்ளியில் பயின்ற ஒன்று முதல் இரண்டு வயதுக்கு இடைப்பட்ட மூன்று பெண் குழந்தைகளை அவர்கள் தூங்கும்போது பாலியல் ரீதியில் 61 வயது தியோ குவான் ஹுவாட் துன்புறுத்தினார்.

அவருக்கும் ஒன்பது ஆண்டுகள், நான்கு மாதங்கள், ஏழு வாரங்கள் சிறைத் தண்டனை கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்