தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேராசிரியர் பலி: கைப்பேசியைப் பார்த்தவாறு லாரி ஓட்டிய வெளிநாட்டு ஊழியருக்குச் சிறை

2 mins read
5ad120da-da3b-427e-895f-9308fb6654b2
2023 ஜூலை 7ஆம் தேதி நடராஜன் மோகன்ராஜன் கவனக்குறைவாக ஓட்டிய லாரி, கார் மீது மோதியது. கார் உருண்டு சென்று வேன் மீது மோதவே அந்த வேன் அருகிலிருந்த பேருந்து மீது மோதியது. - படம்: எஸ்பிஎச் மீடியா

கவனக்குறைவாக லாரி ஓட்டியதால் சட்டத் துறைப் பேராசிரியர் ஒருவரின் உயிர்போனது.

லாரியை ஓட்டிய இந்திய நாட்டவரான நடராஜன் மோகன்ராஜ், 28, என்பவருக்கு இன்று (ஆகஸ்ட் 29) ஈராண்டு மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டன.

உயிரைப் பறித்த அந்தச் சம்பவம் 2023 ஜூலை 7ஆம் தேதி நிகழ்ந்தது.

அன்றைய தினம் அப்பர் தாம்சன் சாலையில் லாரி ஓட்டிச் சென்ற நடராஜன், லாரியின் முன்பக்கக் கண்ணாடியில் பொருத்தப்பட்ட கைப்பேசியைப் பார்த்தவாறு இருந்தார். 

அப்போது சாலை நடுவே இருந்த தடுப்பில் லாரி மோதியது. அந்தத் தடுப்பில் இருந்த பச்சை நிற உலோகக் கம்பிகள் உடைந்து நொறுங்கியதோடு இரண்டு மரங்களும் சாய்ந்தன. தடுப்பை உடைத்துக்கொண்டு, எதிர்புறம் வந்த வாகனங்களின் முன்னால் போய் தடுமாறியது லாரி.  

அப்போது, தேசிய பல்கலைக் கழகத்தின் மூத்த சட்டப் பேராசிரியரான யான் யோக் லின், 70, என்பவரின் கார்மீது லாரி மோதியது. அதனால், அந்த கார் உருண்டோடி அருகிலிருந்த வேன் மீது மோதியது. அந்த வேன் அதனருகில் இருந்த பேருந்து மீது மோதியது.

பலத்த சேதமடைந்த காரினுள் பேராசிரியர் டான் சிக்கிக்கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவரை மீட்க ஒரு மணிநேரம் ஆனது. மண்டை ஓட்டில் ஏற்பட்ட காயங்களுடன் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பேராசிரியர் டான், அங்கு உயிரிழந்தார்.

கார் மோதியதால் 28 வயது வேன் ஓட்டுநருக்கும் விலா எலும்பில் முறிவுகள் ஏற்பட்டன.

அந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்ட பின்னரும் நடராஜன் 2024ஆம் ஆண்டு இருமுறை லாரி ஓட்டியுள்ளார். 2024 ஜனவரி மாதம் லாரி ஓட்டிச் சென்றபோது இருக்கை வார் அணியாததைக் கண்ட போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

பின்னர் 2024 மே மாதம் அதே லாரியை அதன் உரிமையாளரின் அனுமதி இன்றி அவர் ஓட்டினார். அப்போதும் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியிடம் அவர் சிக்கினார்.

குறிப்புச் சொற்கள்