தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறதிநோயால் பாதிக்கப்பட்ட முதியவரிடமிருந்து $34,000 திருடிய பணிப்பெண்ணுக்குச் சிறை

2 mins read
9e034d55-5d70-47cf-9e12-0f31e9f3f821
லேசான மறதிநோயால் பாதிக்கப்பட்ட 95 வயது ஆடவரையும் அவரின் 93 வயது மனைவியையும் பராமரிக்க நியமிக்கப்பட்ட இந்தோனீசியப் பணிப்பெண் சுமியாட்டி திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். - படம்: பிக்சாபே

இந்தோனீசியாவைச் சேர்ந்த பணிப்பெண் சுமியாட்டி, 40, தன் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து புதன்கிழமை (மே 14) அவருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லேசான மறதிநோயால் பாதிக்கப்பட்ட 95 வயது ஆடவரையும் அவரின் 93 வயது மனைவியையும் பராமரிப்பதற்காக அவர் வேலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அந்த முதியவரின் கைத்தொலைபேசி வழியாகப் பலமுறை அவரது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி அதிலிருந்து $34,000க்கும் அதிகமான தொகையைத் திருடியதைச் சுமியாட்டி ஒப்புக்கொண்டார்.

முதியவர் தமது வங்கிக் கணக்கின் பயனீட்டாளர் அடையாள எண், மறைச்சொல் ஆகியவற்றைக் குறிப்பேட்டில் எழுதி அதை மேசை மீது வைத்திருந்தார். அவற்றை மனனம் செய்த சுமியாட்டி வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடினார்.

2023ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 10 முறை அவர் முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் தனது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முதிய தம்பதியைப் பராமரிக்கும் வேலையை அவர் செய்துவந்தார். முதலாளி தன்னை நன்றாக நடத்தியதாகவும் தேவைப்பட்டபோதெல்லாம் முன்கூட்டியே சம்பளத்தைத் தந்ததாகவும் சுமியாட்டி கூறினார்.

முதியவர் முழுநம்பிக்கையுடன் தனது கைப்பேசி மூலம் இணையத்தில் பொருள்களை வாங்குவதற்கு சுமியாட்டியை அனுமதித்திருந்தார்.

முதன்முறை பணத்தை முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து தனது வங்கிக் கணக்கிற்கு அவர் மாற்றியது முதியவரின் கவனத்திற்கு வரவில்லை என்றதால் மீண்டும் மீண்டும் அதேபோல் தவறு செய்யத் துணிந்தார் சுமியாட்டி.

தவறு வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, மாதம் $500 வெள்ளி என்ற கணக்கில் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக அவர் முதியவரிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஒப்புக்கொண்ட முதியவர் காவல்துறையில் புகாரளிக்கவில்லை. ஆனால், 13 நாள்களுக்குப் பிறகு சுமியாட்டி காணாமல் போகவே தமது மகளிடம் நடந்ததைக் கூறினார். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி சுமியாட்டி கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்