படுத்த படுக்கையாக இருந்த தமது தோழியின் மத்திய சேம நிதிக் கணக்கிற்குள் நுழைந்து அவரது $54,000 பணத்தைத் தமது வங்கிக் கணக்கிற்கு மாற்றிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளன.
யு மிங்யான் எனப்படும் அந்த 34 வயது ஆடவருக்கு 18 மாதம், இரு வாரம் சிறைத் தண்டனையும் $30,000 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளன.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் அவர் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
கணினிக் கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்திய இரு குற்றச்சாட்டுகளை அந்த சிங்கப்பூரர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
அந்த ஆடவரின் 62 வயது தோழி மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் பேச இயலவில்லை.
அவரை மருத்துவமனையில் சந்தித்த யு, அந்தப் பெண்ணின் கைப்பேசியைப் பயன்படுத்தி அவரது மத்திய சேம நிதிக் கணக்கைத் திறக்க முயன்றார். மறைச்சொல் இதுவாகத்தான் இருக்கும் என்று அதனைப் பயன்படுத்தினார். அது சரியாக இருந்தது.
அதன்மூலம் மசே நிதிக் கணக்கிற்குள் நுழைந்து 2023 ஜூன் 10ஆம் தேதியும் 2023 ஜூலை 27ஆம் தேதியும் அந்தப் பெண்ணின் சேமிப்புப் பணத்தை தமது வங்கிக் கணக்கிற்கு ஆடவர் மாற்றிவிட்டார். இருமுறையும் அவர் மாற்றிய தொகை $54,000 என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிகழ்ந்தபோது யு கடன்சுமையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
யுவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கு ஒன்றிற்கு சந்தேகப்படும் முறையில் அந்தப் பெண்ணின் பணம் அனுப்பப்பட்டதை அறிந்த அவரது உறவினர் ஒருவர் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.