முன்னாள் அதிபர் ஹலிமா கொல்லப்பட வேண்டும் என்று கூறியவருக்குச் சிறைத் தண்டனை

முன்னாள் அதிபர் ஹலிமா கொல்லப்பட வேண்டும் என்று கூறியவருக்குச் சிறைத் தண்டனை

2 mins read
2cd1adab-ceaa-44c2-9ae8-70514ed35317
விக்ரமனுக்கு 10 மாதம், 12 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

2023ஆம் ஆண்டில் அப்போதைய அதிபரான ஹலிமா யாக்கோப் கொல்லப்பட வேண்டும் என்று இன்ஸ்டகிராம் கதையில் குறிப்பிட்டு, நீதிபதி ஒருவரைக் கத்தியால் குத்த விரும்புவதாக மிரட்டிய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விக்ரமன் ஹார்வி செட்டியார் என்ற அந்த ஆடவர், போதைப் பொருள் கடத்தல்காரர்களின் மரண தண்டனை குறித்து வருத்தமடைந்து சமூக ஊடகப் பதிவை வெளியிட்டிருந்தார்.

அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட பிறகு அவர், அந்த நேரத்தில் தனது வழக்கை விசாரிக்கும் நீதிபதியை கத்தியால் குத்த விரும்புவதாக காவல்துறை அதிகாரியிடம் கூறி மிரட்டியிருந்தார்.

பிப்ரவரி 12ஆம் தேதியன்று மூன்று அலைக்கழிப்புக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 34 வயதான விக்ரமனுக்கு 10 மாதங்கள் மற்றும் 12 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆதாரம் இல்லாமல் பொய் சொன்னதையும் சிங்கப்பூரரான அவர் ஒப்புக்கொண்டார்.

பல அலைக்கழிப்பு உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகள் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

அரசாங்க துணை வழக்கறிஞர்கள் கெவின் யோங், ஷான் லிம் ஆகியோர் விக்ரமன் தனக்கு மனநலக் கோளாறு இருந்ததாகக் கூறியதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவித்திருந்தனர்.

ஆனால், மனநலக் கழகம் அவரை இரண்டு முறை பரிசோதித்ததில், அவரது கூற்றுக்கு ஆதாரமில்லை என்பதைக் கண்டறிந்தது.

2023 ஏப்ரல் 30ஆம் தேதியன்று அப்போதைய அதிபர் ஹலிமாவின் மரணத்திற்கு அழைப்பு விடுக்கும் இன்ஸ்டகிராம் கதையை அவர் வெளியிட்டார்.

பொதுமக்களில் ஒருவர், அந்தப் பதிவு குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து விக்ரமன் மீது குற்றம்சாட்டப்பட்டது. மாவட்ட நீதிபதி லோரேய்ன் ஹோ பல கடுமையான நிபந்தனைகளுடன் அவரை பிணையில் விடுவித்தார்.

பின்னர் 2024 மார்ச் 5 முதல் 7 வரை விசாரணைக்கு தேதி குறிப்பிடப்பட்டது.

ஆனால் அந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று பல கோரிக்கைகளை முன்வைத்து விசாரணையில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று அரசு நீதிமன்றத்தின் இணையத்தளத்தில் ஒரு மனுவை அவர் சமர்பித்தார்.

இதையடுத்து, அரசு நீதிமன்றங்களின் ஊழியர் ஒருவர், இதுபோன்ற நடத்தைகளை தவிர்த்து விசாரணையில் கலந்துகொள்ளுமாறு விக்ரமனுக்கு மின்னஞ்சல் வழியாக அறிவுறுத்தியிருந்தார்.

2024 மார்ச் 1 அன்று பிணை நிபந்தனைகளால் கோபமடைந்த விக்ரமன், நீதிபதி ஹோவை அச்சுறுத்தும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, விக்ரமன் காவல்துறையின் நேரடி தொலைபேசி எண்ணை அழைத்து, நீதிபதியை கத்தியால் வெட்டவும் குத்தவும் விரும்புவதாக ஒரு அதிகாரியிடம் கூறினார். இது குறித்து அந்த அதிகாரி புகார் அளித்தார்.

பிப்ரவரி 12ஆம் தேதி தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட விக்ரமனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்