மோசடிச் சம்பவங்களில் மொத்தம் $501,151 இழந்த சிங்கப்பூரர்கள் இருவரிடமிருந்து பணமெடுக்க, எல்லை தாண்டிய குற்றச்செயல் கும்பல் ஒன்றுக்கு மலேசிய ஆடவர் ஒருவர் உதவினார்.
அந்தத் தொகையிலிருந்து ஜெரால்ட் லிம் சுவென் வென் என்ற அந்த ஆடவர், அவ்விருவரிடமிருந்தும் $427,151 பெற்றுக்கொண்டார்.
நிதி ரீதியில் அவருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்பதால் லிம் சிங்கப்பூருக்கு வந்து பணம் பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமக்கு கிட்டத்தட்ட 10,000 ரிங்கிட் (S$3,000) கிடைத்ததாக லிம் கூறினார்.
அந்த 26 வயது ஆடவருக்கு திங்கட்கிழமை (நவம்பர் 18) மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மொத்தம் $125,000 சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களால் கிடைத்த பலனின் தொடர்பில் அவர் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மற்ற நான்கு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பில் கவனத்தில் கொள்ளப்பட்டன. லிம் எந்தத் தொகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
சென்ற ஆண்டு, லிம்மின் நண்பர்களில் ஒருவர், வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி, ‘ஓப்பன்பே’ எனும் சீனாவில் தளம் கொண்ட குழுமத்திற்கு அவரை அறிமுகப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வேலையின் ஒரு பகுதியாக, லிம் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டு, ‘ஓப்பன்பே’ வாடிக்கையாளர்களிடமிருந்து இரவில் பணம் பெறவேண்டும்.
பின்னர், லிம் அந்தப் பணத்தை மின்னிலக்க நாணயமாக (cryptocurrency) மாற்றி, அதில் 99 விழுக்காட்டை ‘ஓப்பன்பே’ன் மின்னிலக்க நாணயக் கணக்கிற்கு (cryptocurrency wallet) மாற்றிவிடவேண்டும். அதன் மூலம் அந்தக் குழுமத்திற்கு சிங்கப்பூருக்கு வெளியிலிருந்தும் பணத்தை எடுக்க முடியும்.
எஞ்சிய 1 விழுக்காட்டை லிம் தனது வெகுமதியாக எடுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.