சூதாட்டத்திற்கு அடிமையான ஆடவர், அதற்கு போதுமான நிதி இல்லாததால் மோசடி வேலையில் ஈடுபட்டார்.
கார்களை விற்பனை செய்யும் ஊழியரான எட்வின் தோ ஜிங், வாடிக்கையாளர்கள் கார் வாங்க கொடுத்த பணத்தை தமது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.
அண்டை வீட்டுக்காரர் உட்பட ஆறு பேரை 27 வயது எட்வின் ஏமாற்றியுள்ளார். அவர்களிடம் 128,000 வெள்ளிக்கு மேலான நிதியை வாங்கி மோசடி செய்துள்ளார்.
மோசடி செய்தபோது எட்வின் பிரிவிலேஜ் மோட்டார்ஸ் (Privilege Motors) என்ற நிறுவனத்தில் வேலை செய்தார்.
எட்வின் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மோசடி வேலையில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தம்மீது சுமத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளை எட்வின் ஒப்புக்கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, வியாழக்கிழமை (டிசம்பர் 19) எட்வினுக்கு 21 மாதச் சிறைத் தண்டனை விதித்தார்.