கார் இறக்குமதி நிறுவனம் ஒன்றின் இயக்குநருக்கு 112 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு மோசடிக்காக விதிக்கப்பட்ட 14 மில்லியன் வெள்ளியை செலுத்தத் தவறியதே அதற்குக் காரணம்.
‘க்ரௌன்ஸ்டன் லைன்’ நிறுவனத்தின் இயக்குநரான கிளமன்ட் லீக்கு பிப்ரவரி 25ஆம் தேதி அந்த அபராதம் விதிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஜூலைக்கும் 2022ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் இடையே சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,500க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான மதிப்பைக் குறைத்துக் கூறியிருந்ததால், அவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர்ச் சுங்கத்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் மார்ச் 11ஆம் தேதி வெளியிட்ட கூட்டு அறிக்கையில் அதனைத் தெரிவித்தன.
44 வயது சிங்கப்பூரரான லீ, ஏறக்குறைய $5.2 மில்லியன் மதிப்பிலான வரியைச் செலுத்தத் தவறியதன் தொடர்பில் சுமத்தப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது பொருள், சேவை வரியைச் செலுத்தத் தவறியது, பொய்யான தகவலைத் தெரிவித்தது ஆகியவற்றின் தொடர்பில் சுமத்தப்பட்ட மேலும் 15 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அந்த நேரத்தில், நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் பதிவுசெய்த கிட்டத்தட்ட 1,000 வாகனங்களின் மதிப்பைக் குறைத்துத் தெரிவித்ததால், அவருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், அவர் செலுத்தவேண்டியிருந்த கூடுதல் பதிவுக் கட்டணமும் குறைவாக இருந்தது.
தவறான தகவல்களைத் தெரிவித்ததால், கூடுதல் பதிவுக் கட்டணத்தில், மொத்தம் $39.1 மில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்தத் தொகையை ஆணையத்திடம் செலுத்துமாறு நீதிமன்றம் லீக்கு உத்தரவிட்டிருந்தது.

