ஐந்து பேரிடம் $6,000 அளவுக்கு வாடகை மோசடி செய்த ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
வாடகை என்ற பெயரில் மோசடி செய்த பெண் ஒருவரைப் பற்றி ஃபேஸ்புக் வாயிலாக அறிந்த லீ வெய் ஜீ எனப்படும் அந்த 27 வயது ஆடவர் தாமும் அதுபோல செய்ய முடிவெடுத்தார்.
பொங்கோலில் உள்ள தமது வீட்டில் வாடகைக்கு அறை இருப்பதாகக் கூறி, ஐந்து பேரிடம் தனித்தனியாக $400 முதல் $2,200 வரை அவர் வசூல் செய்ததாகக் கூறப்பட்டது.
அறையை வாடகைக்கு விடும் எண்ணம் எதுவும் இல்லாதபோதிலும் கடந்த ஆண்டும் இவ்வாண்டும் அவர் மோசடியில் ஈடுபட்டார்.
ஐந்து மோசடிக் குற்றச்சாட்டுகளையும் கணினிக் கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்திய இரு குற்றச்சாட்டுகளையும் செப்டம்பர் 26ஆம் தேதி அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) அவருக்கு ஓராண்டு, எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, வாடகை மோசடியை அரங்கேற்றுவது பற்றி 2023 மார்ச் மாதம் ஃபேஸ்புக்கில் ஆடவர் அறிந்த பின்னர் அதேபோன்ற மோசடியை நடத்த லீ முடிவெடுத்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
அறையை வாடகைக்கு விடுவதாகக் கூறி முன்பணம் பெறும் அவர், பின்னர் வாடகைக்கு விட விருப்பமில்லை என்று கூறி முன்பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறுவார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், சொல்லியபடி பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்துவிடுவார். ஐவரையும் அதேபோல ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.