சாங்கி விமான நிலையத்தில் சேவை வழங்கும் ‘சேட்ஸ்’ நிறுவன ஊழியருக்கு 4,000 வெள்ளிக்கு மேற்பட்ட தொகையை லஞ்சமாகத் தந்த ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
‘சேட்ஸ்’ நிறுவனம் (SATS), விமானப் பயணம் தொடர்பான தரைத்தளச் சேவைகளையும் விமானத்தினுள் வழங்கப்படும் உணவைச் சமைத்துத் தரும் சேவைகளையும் வழங்குகிறது.
அதன் ஊழியரான லியோங் போ கியோங் என்பவருக்கு ‘டிகே இஞ்சினீயரிங்’, ‘என்வ்-புரோ டெக் இஞ்சினீயரிங்’ ஆகிய நிறுவனங்களின் இயக்குநரான லிம் பான் ஹாக் எனும் 58 வயது ஆடவர் மத்திய சேம நிதி (மசேநிதி) செலுத்தினார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து வீட்டுக் கடன் வாங்க உதவும் நோக்கில் லிம், லியோங்கிற்கு அவ்வாறு பணம் செலுத்தியதாக அரசாங்கத் தரப்பு கூறியது.
அந்த நேரத்தில் லியோங், ‘சேட்ஸ்’ நிறுவனத்தின் ஏலக்குத்தகை மதிப்பீட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்ததாகக் கூறப்பட்டது.
இது தவிர, லிம் கடனாக 2,000 வெள்ளியை லியோங்கிற்கு வழங்கினார் என்றும் அதை லியோங் இன்னும் திருப்பித் தரவில்லை என்றும் தெரிகிறது.
இவ்வழக்கில், $4,376 லஞ்சம் தந்தது தொடர்பான குற்றச்சாட்டை ஜனவரி 8ஆம் தேதி, லிம் ஒப்புக்கொண்டார்.
$2,000 தொடர்பான மேலும் ஒரு குற்றச்சாட்டும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தை ஏமாற்றியது தொடர்பான குற்றச்சாட்டும் லிம்முக்குத் தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அவர் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 20ஆம் தேதி லிம் தனது தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

