முன்னாள் நிதி ஆலோசகர் ஓங் கா யோங்கிற்கு மூவாண்டுகள் 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் பொய்யான முதலீட்டு வாய்ப்புகளைக் காரணங்காட்டி 25 பேரை ஏமாற்றினார்.
36 வயது ஓங், 25 பேரிடமிருந்தும் வங்கிப் பணப் பரிமாற்றம் மூலமாகவும் மொத்தம் $1,275,500 பெற்றார். ஏமாற்றியதாக 11 குற்றச்சாட்டுகளை அவர் ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்படுமுன், அவர்மீதான அதுபோன்ற மேலும் 14 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
‘மேனுலைஃப்’ நிறுவனமொன்றில் பணிபுரிந்த ஓங், அவரது திட்டத்தை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்தார். அதன்பிறகு, அவர் காவல்துறையிடம் சரணடைந்தார்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தாம் பல பேரின் நம்பிக்கையைக் கீழறுத்ததாக அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
ஓங் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அவரது வாடிக்கையாளர்களில் ஒருவரை அணுகி, ‘மேனுலைஃப்’ ஊழியர்களுக்கு மட்டுமே முதலீட்டு முறி ஒன்று வழங்கப்படுவதாகக் கூறினார். அந்த முறியை அவரிடம் கொடுக்கப்போவதாக ஓங் கூறினார்.
அந்த வாடிக்கையாளர் $5,000 முதலீடு செய்தால், போட்ட பணத்தையும் சேர்த்து, ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் $187.50 தொகை கிடைக்கும் என்று அவரிடம் ஓங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, அவர் ஓங்கிடம் $5,000 ரொக்கத்தை வங்கி மூலம் கொடுத்தார். ஆறு மாதங்கள் கழித்து அவர் போட்ட பணத்தையும் சேர்த்து, கூடுதலாக 1,125 வெள்ளியும் கிடைத்தது.
ஓங் இவ்வாறே பலமுறை செய்தார்.
இறுதியில், அந்த மாதிற்குச் சேரவேண்டிய தொகையை அவர் கொடுக்கவில்லை. அந்த மாது மொத்தம் $8,125 இழந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
இதுபோலவே ஓங் மற்றவர்களையும் ஏமாற்றினார்.
அவர் மொத்தம் $267,856 ரொக்கத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்றும் இன்னும் $1,007,644 எஞ்சியுள்ளது என்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஏமாற்றுக் குற்றச்சாட்டுக்கு, ஒருவருக்கு மூவாண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.