தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் ஸ்கூட் விமானத்திற்குள் ரகளை செய்த ஆடவருக்குச் சிறை

2 mins read
a7b7b0f8-36b5-40ea-bce7-b704aac5a3c5
கடந்த பிப்ரவரி மாதம் சிட்டினியில் இருந்து சிங்கப்பூர் வந்த விமானத்தில் ஆடவர் ரகளை செய்தார். - படம்: ஊடகம்

ஸ்கூட் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது குடிபோதையில் ரகளை செய்த ஆடவருக்கு ஐந்து வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கொலத்து ஜேம்ஸ் லியோ, 42, எனப்படும் அந்த ஆடவர் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிட்னியில் இருந்து சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் குடிபோதையுடன் தகராறு செய்தார்.

கேன்பராவில் வசித்த அவர், இந்தியாவில் உள்ள உறவினர் காலமானதைக் கேள்விப்பட்டு சிங்கப்பூர் வழியாக இந்தியா செல்லத் திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார்.

ஆனால், சிட்னி விமான நிலையத்திற்குக் குடிபோதையுடன் சென்ற அவர், அந்த நிலையிலேயே விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் பறக்கத் தொடங்கியதும் இருக்கை வாரை அவிழ்த்துவிட்டு எழுந்தார்.

இருக்கையில் அமருமாறு விமானப் பணியாளர்கள் வற்புறுத்தியும் அதனை கொலத்து செவிமடுக்கவில்லை. தொடர்ந்து, அருகில் அமர்ந்திருந்த மூன்று பயணிகளுக்கு அவர் தொந்தரவு கொடுத்தார்.

அவர்களை நோக்கி உரக்கக் கத்திய அவர், பயணிகளில் ஒருவரைத் தள்ளிவிட்டார். மூன்று பயணிகளும் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

அவரை எச்சரித்து விமானி கொடுத்த கடிதத்தை கொலத்து கசக்கி எறிந்துவிட்டார்.

விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரை இறங்கியதும் ஸ்கூட் விமானம் அளித்த புகாரின் பேரில் கொலத்து கைது செய்யப்பட்டார்.

விமானப் பணியாளர் ஒருவரின் மணிக்கட்டைப் பிடித்து, அவரைக் கொல்லப்போவதாக கொலத்து மிரட்டல் விடுத்த செயலும் அவரது குற்றங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது.

விமானத்திற்குள் ரகளையில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விமானம் மற்றும் விமானப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடிய நடுவான் ரகளை இது என்று தீர்ப்பு வழங்கியபோது நீதிபதி ஜேனட் வாங் குறிப்பிட்டார்.

விமானப் பாதுகாப்புப் சட்டத்தின்கீழான குற்றத்திற்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை, $20,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்