காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க உதவிய 52 வயதான இங் சுவான் செங்கிற்கு நீதிமன்றம் திங்கட்கிழமை ஐந்து வாரம் சிறைத்தண்டனை விதித்தது.
இங், கேலாங் ரோட்டில் இயங்கி வரும் ‘கேடிவி’ என்னும் மதுக்கடையின் முன்னாள் உரிமையாளர் ஆவார்.
குண்டர் கும்பல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல் நிலைய ஆய்வாளர் ஒருவருக்கு, வேறு இரு ஆடவர்கள் லஞ்சம் கொடுக்க உதவியாக ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததாக இங்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.
அவர் நடத்தி வந்த மதுக்கடையில் பணிபுரிந்த ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் இங்மீது சுமத்தப்பட்டது.
அதற்காக அவருக்கு $1,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் அந்த அதிகாரியின் பெயர் பூ சி சியாங். அவருடைய வயது 46. குண்டர் கும்பல் தடுப்புப் பிரிவு அதிகாரியான அவருக்கு, இரு கும்பல்களுக்கு இடையேயான சண்டை தொடர்பான விசாரணையை ‘முடிவுக்கு’ கொண்டுவர உதவுவதற்காக ஒரு சிவப்பு உறையில் $2,000 லஞ்சப் பணமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்த அதிகாரியை 2020ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி காவல்துறை பணியிடைநீக்கம் செய்தது. அவர் மீதான ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.


