தம்மை கேலி செய்ததாக நினைத்த ஆடவர், 67 வயது மூதாட்டியை உதைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த ஆடவருக்கு 13 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
51 வயது அல்வின் சியூ மிங், தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். தம்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை அல்வின் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தாக்குதல் சம்பவம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி சர்கிட் ரோட் உணவங்காடி நிலையத்தில் நடந்தது.
உணவங்காடி நிலையத்தில் இருந்த மாது தம்மை திட்டுவதாக எண்ணிய அல்வின் அந்த மாதை மிரட்டினார்.
அல்வின் அச்சுறுத்தல் தரும் விதமாக நடந்துகொண்டதால் அங்கிருந்து மாது கிளம்பினார். இதனால் ஆத்திரமடைந்த அல்வின், பெண்ணின் இடுப்புப் பகுதியில் உதைத்தார்.
வேகமாக உதைத்ததால் அப்பெண் உணவங்காடி நிலையத்தில் இருந்த நாற்காலிகள் மீது மோதி, தரையில் விழுந்தார். அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் ஏழு நாள்கள் சிகிச்சை பெற்றார்.
மற்றவர்களை அடித்தக் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.