வாகனங்களுக்கு எண்ணெய் உள்ளிட்ட திரவங்களை விற்கும் எக்ஸ்லூப் (Exlube) நிறுவனத்தின் இயக்குநர் $404,000 கையாடல் செய்தார்.
அந்தப் பணத்தை சூதாட்டத்தில் செலவிட்ட அவர் $800,000க்குமேல் இழந்தார்.
ஹென்டிரா லிம் இயு கெங் என்னும் அந்த 51 வயது ஆடவருக்கு ஈராண்டு, 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை மோசடி செய்ததாக லிம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரரான லிம் தாம் நொடித்துப்போனதாக அறிவித்தார். இதனால் அவர் கையாடல் செய்த பணத்தை நிறுவனத்திற்கு திருப்பிக் கொடுக்கவில்லை.
லிம், 2016 செப்டம்பர் மாதம் எக்ஸ்லூப் நிறுவனத்தை நிறுவினார்.
2017 ஏப்ரலில் அவருக்கு பெட்ரோல் தொடர்பான பொருள்களை விற்பனை செய்ய சீனாவைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து பெரிய தொழில் வாய்ப்பு கிடைத்தது.
போதிய நிதி இல்லாததால் லிம் மற்றொரு நிறுவனத்திடம் $504,000 முதலீடு கேட்டார்.
அந்த நிறுவனமும் லிம்மிற்கு நிதியைக் கொடுத்தது. ஆனால், அந்த நிதியைத் தமது சொந்த செலவுகளுக்காக அவர் பயன்படுத்திக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
பணம் திரும்பி வராததால் கடன் வழங்கிய நிறுவனம் புகார் கொடுத்தது. அதன் அடிப்படையில் லிம் மீது விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

