சிறைச்சாலை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவருக்குச் சிறை

சிறைச்சாலை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவருக்குச் சிறை

2 mins read
https://www.straitstimes.com/singapore/courts-crime/jail-for-man-who-posed-as-prison-officer-to-seek-help-from-president-tharman-via-e-mail
2759728f-ca75-4f3e-b07c-3325f1e6f455
பிரகாஷ் பரமசிவம் தமது முன்னைய குற்றங்களின் தொடர்பில் தம்மீது தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டதாகக் கருதினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆடவர் ஒருவர் முன்னைய குற்றங்களின் தொடர்பில் உதவி நாடும் முயற்சியில், அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்கும் சிங்கப்பூர் நாடாளுமன்றச் செயலகத்திற்கும் மின்னஞ்சல் அனுப்ப, சிறைச்சாலை அதிகாரியைப் போல் ஆள்மாறாட்டம் செய்தார்.

பிரகாஷ் பரமசிவம் தமது முன்னைய குற்றங்களின் தொடர்பில் தம்மீது தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டதாகக் கருதியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

கூடுதல் விவரங்களை வெளியிடாமல், 2018ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையே பிரகாஷ் குற்றச்செயல்களுக்காக சிறைக்கு ஒருமுறைக்கு மேல் சென்றதாக அரசுத் தரப்பு தெரிவித்தது.

இதற்கிடையே, குடும்ப விவகாரங்களின் தொடர்பில் உதவி கேட்க அப்போதைய தேசிய வளர்ச்சி அமைச்சரும் தற்போதைய கல்வி அமைச்சருமான டெஸ்மண்ட் லீக்கு மின்னஞ்சல் அனுப்ப, அவர் சிறைச்சாலை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தார்.

அவர் தமது தாயாரின் கைப்பேசியைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை (பிப்ரவரி 16) 25 வயதான அவருக்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் அரசாங்க ஊழியராக ஆள்மாறாட்டம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதோடு, போலியான மருத்துவச் சான்றிதழைப் பயன்படுத்திய குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

பிரகாஷ், கடந்த 2024ம் ஆண்டில் சிங்கப்பூர் நாடாளுமன்றச் செயலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார். தமது முன்னைய குற்றங்களுக்கு காவல்துறை தம்மீது தவறாகக் குற்றஞ்சாட்டியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, பிரகாஷ் மீண்டும் சிறைச்சாலை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடமிருந்து உதவி நாட முயற்சி செய்ததாக அரசுத் தரப்பு கூறியது. அவர் அப்போதைய தேசிய வளர்ச்சி அமைச்சர் லீக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாகச் சிறைச்சாலை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, அதிபர் தர்மனுக்கு அவர் மின்னஞ்சல் அனுப்பினார்.

நான்கு நாள்களுக்குப் பிறகு அவர் கைதுசெய்யப்பட்டார். 2024ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மீண்டும் 2025ல் குற்றம் புரிந்தார். அதே ஆண்டு, ஜூலை 2ம் தேதி அவர் மருந்தகம் ஒன்றில் மருத்துவரைப் பார்த்து, மருத்துவச் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொண்டார். அதில் அவர் இரண்டு நாள்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்க்க அனுமதி இல்லை.

நீதிமன்றத்திற்குச் செல்லாமல் இருக்க அனுமதி உண்டு என்று மருத்துவச் சான்றிதழில் அவர் மாற்றம் செய்தார். அதனைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிரகாஷ் கைதுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்