பேருந்தில் சக பயணியின் தலையில் ‘சூப்பர்க்ளூ’ பசையை ஊற்றியதுடன் மாணவர் ஒருவரின் பணப்பையைத் திருடிய 53 வயது ஆடவருக்கு வெள்ளிக்கிழமை (மே 16) 31 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்மி வோங் கொக் சின் எனும் அந்த ஆடவர் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கும்போது, அவர் ஒரு போத்தல் வாகன இயந்திர எண்ணெய் திருடியது தொடர்பான குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட வோங், வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஏற்கெனவே அவர் சிறையிலிருந்த காலத்தில் வோங் தண்டனையை நிறைவேற்றியதாகக் கருதப்பட்டது.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, பிடோக் பேருந்துச் சந்திப்பிலிருந்து பயணம் செய்த 33 வயது ஆடவர் உறங்கிவிட்டார். பிற்பகல் 1 மணியளவில் கிளமெண்டி ரோட்டில் அதே பேருந்தில் ஏறிய வோங் ஆடவரின் பின்னிருக்கையில் அமர்ந்தார்.
பிற்பகல் 1.50 மணியளவில் பின்னாலிருந்து தலையில் ஏதோ திரவம் ஊற்றப்பட்டதை உணர்ந்து அந்த ஆடவர் வோங்கைக் கேட்டபோது தான் ஏதோ பொருளைத் தவறவிட்டதாக அவர் பதிலளித்தார்.
தலையிலும் சட்டையிலும் பசையை உணர்ந்த ஆடவர் பேருந்து ஓட்டுநரிடம் புகாரளித்தார். அதற்குள் வோங் அந்தப் பேருந்திலிருந்து இறங்கிவிட்டார்.
ஆடவர் காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்துப் புகாரளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2024 ஏப்ரல் 15ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்தில் பேருந்துச் சேவை 183ல் ஏறிய 18 வயது மாணவி, உறங்கிவிட்டதாகத் தெரிகிறது.
ஐந்து நிமிடம் கழித்துக் கிளமெண்டி ரோட்டில் அதே பேருந்தில் ஏறிய வோங் மாணவியின் பணப்பையைத் திருடிய பிறகு பேருந்திலிருந்து இறங்கிவிட்டார்.
அந்த மாணவி பிறகு காவல்துறையிடம் புகாரளித்தார்.