கஞ்சா போதையில் வெட்டுக்கத்தியால் தாக்கிய ஆடவருக்குச் சிறை, பிரம்படி

கஞ்சா போதையில் வெட்டுக்கத்தியால் தாக்கிய ஆடவருக்குச் சிறை, பிரம்படி

2 mins read
2ae68b6f-7593-4e97-adaa-42651e5fda66
நபிலுக்குச் சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கஞ்சா போதையில் இருந்த 29 வயது நபில் எர்ஃபான் கமில், தனக்கு அறிமுகமான ஒருவர் தன்னைத் தாக்க வருவதாக எண்ணிக் கத்தியால் அவரைத் தாக்கினார்.

நபிலுக்கு ஜனவரி 11ஆம் தேதியன்று 31 மாதம், ஆறு வாரச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

வேண்டுமென்றே காயம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதங்கொண்டு வேண்டுமென்றே கொடூரமான காயம் விளைவித்தல் என்ற இரு குற்றச்சாட்டுகளையும் நபில் முன்னதாக ஒப்புக்கொண்டார்.

நபில் கஞ்சா புகைத்ததாகவும் கஞ்சா புகைப்பதால் ஏற்படும் மனநல மருத்துவப் பிரச்சினை நபிலுக்கு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நபில் 2022ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் ஜாலான் புக்கிட் மேராவிலுள்ள புளோக் 116ன் கீழ்த்தளத்தில் சந்தித்த ஆடவரை, வீட்டின் வெளியே தன்னோடு பேசுவதற்கு அழைத்ததாகக் கூறப்பட்டது.

பின்னர், கஞ்சா போதையால் ஏற்பட்ட ஒருவித மனநோய்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபில், சமையலறைக்குச் சென்று அங்கிருந்த வெட்டுக்கத்தியைத் தன் பின்னால் மறைத்துக்கொண்டார்.

நபில் வருவதைக் கவனிக்காமல் அந்த ஆடவர் தன் கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

திடீரென்று நபில் அந்தக் கத்தியைக் கொண்டு ஆடவரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.

நபிலின் தந்தை வீட்டிலிருந்து ஓடிவந்து நபிலைப் பிடித்துக்கொண்டதால் ஆடவர் தப்பித்துச் சென்றார்.

ஆடவர் தன்னை முறைத்துப் பார்த்ததாகவும் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் நபில் தன் தந்தையிடம் கூறினார்.

ஆனால், பின்னர் தெளிவடைந்த நபில் குழப்பமடைந்து நடந்ததைத் தன் தந்தையிடமிருந்து அறிந்துகொண்டார்.

இதைக் கேட்ட நபில் அழுததுடன் அந்த ஆடவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதாக அறியப்படுகிறது.

ஆடவருக்கு இடது மணிக்கட்டிலும் முழங்காலிலும் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததுடன் அவரின் இடது கை எலும்பு முறிந்தது. 29 வயதுடைய அந்த ஆடவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்