சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யும் போது நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து 120,000 வெள்ளி மதிப்புள்ள ரொக்கத்தை திருடியுள்ளார் பெங் ஹுய் என்னும் ஆடவர்.
சீனாவை சேர்ந்த 54 வயது பெங்குக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 21) இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த பெங் அதன் பின்னர் தன்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதி பெங் ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூருக்கு எஸ்கியூ899 விமானம் மூலம் பயணம் மேற்கொண்டார். அந்த விமானத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நகை வியாபாரியும் இருந்தார்.
ஹாங்காங், போங்காக் ஆகிய நகரங்களில் வர்த்தக கண்காட்சிகளை பார்வையிட சென்ற அந்த வியாபாரி கிட்டத்தட்ட 200,000 வெள்ளி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களையும் ஹாங்காங் டாலர்களையும் தமது பையில் வைத்திருந்தார்.
வியாபாரி தமது தலைக்கு மேல் உள்ள அடுக்கில் பணப்பையை வைத்திருந்தார். வியாபாரியிடம் பணம் இருப்பதை அறிந்த பெங், அதைத் திருடினார்.
தன்னிடம் பணம் திருடப்பட்டத்தை அறியாத வியாபாரி பையுடன் விமான நிலையத்தில் இருந்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு தான் பணம் திருடப்பட்டது அவருக்கு தெரிந்தது. அதன் பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே திருடிய ரொக்கத்தில் சிலவற்றை சிங்கப்பூர் பணமாகவும் சூதாட்ட கூடங்களின் நாணயங்களாகவும் பெங் மாற்றியுள்ளார். அதை வைத்து அவர் சூதாடினார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பின்னர் 19,900 வெள்ளியை சீனாவில் உள்ள தமது மனைவிக்கு பெங் மாற்றினார். அதன் பின்னர் தமது சகோதரருக்கு 9,500 வெள்ளி மாற்றினார்.
வியாபாரி கொடுத்த புகாரை அடுத்து வேகமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் பெங்கை அடையாளம் கண்டனர். மேலும் அவர் சீனாவுக்கு அனுப்ப முயன்ற பணப்பரிவர்த்தனையும் நிறுத்தப்பட்டது.
பெங்க்கிடம் இருந்து 66,761 வெள்ளியும் 69,000 ஹாங்காங் டாலர் உட்பட மற்ற சில நாடுகளின் ரொக்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் பணப்பரிவர்த்தனையில் இருந்த 37,900 வெள்ளியையும் அதிகாரிகள் மீட்டனர்.
அதன் பின்னர் பெங்கை அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை நடத்தினர். நீதிமன்றத்தில் தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் பெங் தெரிவித்தார்.