விடுமுறைப் பயணத் திட்டம் பாதிக்கப்பட்டதால் சினமடைந்த ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர், விமானம் விபத்துக்குள்ளாக வேண்டும் எனக் கூறியதை அடுத்து அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மார்லி கர்ட்டிஸ் ஃபிலிப் மான்கிரீஃப் எனும் அந்த ஆடவருக்கு வயது 36.
கடந்த ஆண்டு (2024) நவம்பரில் சிங்கப்பூர் வழியாக புக்கெட் சென்ற அவரின் கடப்பிதழில் விசா இருந்த பக்கம் கிழிக்கப்பட்டிருந்ததால் தாய்லாந்து அதிகாரிகள் அவரைத் திருப்பி அனுப்பினர்.
அதனால் அவர், கடந்த நவம்பர் 20ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் சிங்கப்பூர் வந்தார். அதே காரணத்துக்காக இங்கும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பெர்த் செல்லும் ஜெட்ஸ்டார் விமானத்தில் அவரை ஏற்ற முயன்றபோது, “இந்த விமானம் விழுந்து நொறுங்கி அனைவரும் உயிரிழக்கவேண்டும்,” என்று கூறினார் மான்கிரீஃப்.
விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்ட பின்னர் தன் காதலியிடம் பேசிக்கொண்டிருந்த அவர், “மற்றொரு விமானத்தில் ஏற்றினால் அப்போதும் இதையே கூறுவேன்,” என்றார்.
அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 15ஆம் தேதி துன்புறுத்தல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சொற்களுக்குத் தீவிர பின்விளைவுகள் இருக்கக்கூடும் என்பதைச் சுட்டிய நீதிபதி, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மான்கிரீஃப் மிரட்டல் விடுத்ததைச் சுட்டினார்.

