துணைக் காவல் அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றவருக்குச் சிறை

துணைக் காவல் அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றவருக்குச் சிறை

2 mins read
efb6d82d-727e-4551-a17a-1ad48a11c944
சட்டத்துக்குப் புறம்பாகத் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 42 வயது கோ சுவான் சோங்கிற்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துணைக் காவல் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடவர், மருத்துவமனையில் தாதி ஒருவரிடம் நகவெட்டி கேட்டார். அதை அவர் தரமறுத்ததால், அதிகாரியின் இடுப்பு உறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை ஆடவர் கைப்பற்ற முயன்றார். அதில் ஐந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தன.

சட்டத்துக்குப் புறம்பாகத் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்ற குற்றச்சாட்டை 42 வயது கோ சுவான் சோங் புதன்கிழமை (ஜூன் 17) ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சாங்கிப் பொது மருத்துவமனையில், கோ சிகிச்சை பெற்றுவந்தார். அவர் எதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

மருத்துவ வார்டில் இருந்தபோது, தாதியிடம் அவர் நகவெட்டி கேட்டார். ஆனால் அவரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளும் அவர் முன்வைத்த அதேபோன்ற கோரிக்கையைத் தாதியர் ஏற்கவில்லை.

சினமுற்ற கோ, கடுமையாக நடந்துகொண்டார். அதனால் மருத்துவமனையில் உள்ள துணைக் காவல் அதிகாரிகளைத் தாதியர் உதவிக்கு அழைத்தனர்.

அதிகாரிகள் இருவர் வார்டுக்குச் சென்றனர். கோ, அமைதியாகப் படுக்கையில் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர்.

அதிகாரிகளில் ஒருவர் அவரிடம் பேசச் சென்றபோது, திடீரென அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றார் கோ. இருப்பினும் அவரால் பொத்தான் போடப்பட்டிருந்த உறையிலிருந்து துப்பாக்கியை எடுக்க முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று அதிகாரி அவரிடம் வினவினார். நகவெட்டி கிடைக்காததால், தம்மைத் தாமே சுட்டுக்கொள்வதற்காகத் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றதாக கோ கூறினார்.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் கோ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்