சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வாகனத்தைப் பொறுப்பற்ற வகையில் ஒட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளிவாசல் தலைவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த விபத்து சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டுக்கு அருகில் உள்ள சாலைச் சந்திப்பில் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி இரவு 11 மணி அளவில் நிகழ்ந்தது.
55 வயது முகம்மது ஷாரின் சம்சுதீனுக்கு மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை வியாழக்கிழமை (பிப்ரவரி 27) விதிக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்கள் ஓட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷாரின் ஒட்டிய வாகனம் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த மிதிவண்டி மீது மோதியது.
49 வயது மிதிவண்டி ஓட்டியின் எலும்புகள் முறிந்ததுடன் அவருக்குக் காயங்களும் ஏற்பட்டன.
அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, அவர் ஆறு நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு 49 நாள்கள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.
இந்த விபத்துக்கு முன்பு ஷாரின் பல போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற வகையில் வாகனம் ஓட்டுதல், யு-டர்ன் செய்ய அனுமதிக்கப்படாத இடத்தில் யு-டெர்ன் செய்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.