வாகனப் பரிசோதனைக்கான போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக வாகன இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் ஒருவருக்கு வியாழக்கிழமை (டிசம்பர் 5) 16 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லிம் ஸே யோங், 50, எனப்படும் அவர் கொவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது அந்தக் குற்றத்தில் ஈடுபட்டார்.
பெஸ்ட்லிங் ஆட்டோ (Bestlink Auto) நிறுவனத்தில் அவரும் அவரது பெற்றோர்களும் இயக்குநர்கள். மோட்டார் வாகனங்களின் இணை இறக்குமதி நிறுவனமான பெஸ்ட்லிங், சிறப்புப் பேருந்து சேவைகளையும் வழங்கி வருகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக விகாம் (Vicom) வாகன சோதனைக்கான பதிவு பாதிக்கப்பட்டது.
தமது வாடிக்கையாளர்களின் ஒப்பந்த காலக்கெடு நெருங்கியதால் நிலப் போக்குவரத்து ஆணையத்தில் புதிய வாகனங்களைப் பதிய வேண்டிய கட்டாயம் லிம்முக்கு ஏற்பட்டது.
அந்தப் பதிவை மேற்கொள்ள வாகனங்கள் சோதிக்கப்பட வேண்டும்.
அதனால், தமது நிறுவனம் இறக்குமதி செய்த புதிய வாகனங்கள் சோதிக்கப்பட்டதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தார் லிம். குறைந்தபட்சம் 14 வாகனங்களுக்கு அவர் போலி ஆவணங்களை அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2018 ஜூலை 13க்கும் 2020 மார்ச் 14க்கும் இடைப்பட்ட காலத்தில் போலி ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஏமாற்றும் நோக்கத்துடன் அவை அளிக்கப்பட்டதாக சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை லிம் ஒப்புக்கொண்டார். இதர ஒன்பது குற்றச்சாட்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

