குடிபோதையில் வாகனம் ஓட்டி காயம் விளைவித்தவருக்குச் சிறை

குடிபோதையில் வாகனம் ஓட்டி காயம் விளைவித்தவருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Apr 2026 - 9:05 pm

2 mins read

அனுமதிக்கப்பட்ட அளவைவிட கிட்டத்தட்ட இருமடங்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, புக்கிட் தீமாவில் போக்குவரத்து விளக்கில் காத்திருந்த டாக்சியின் மீது மோதி அதில் இருந்த பயணிக்குக் காயம் விளைவித்த 77 வயது முதியவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டாக்சி பயணிக்கு மூளையில் கடுமையான காயம், விலா எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டன.

குடிபோதையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது, பலத்த காயம் ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களை வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 16) டே கோக் கியாங் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை, $5,000 அபராதம், ஏழு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டன.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மாலை, டே தனது 12 நண்பர்களுடன் பிறந்தநாள் விருந்துக்காகச் சிங்கப்பூர் ஐலண்ட் கன்ட்ரி கிளப்பில் இருந்தார். அங்கு அவர் மதுபானம் அருந்தினார்.

இரவு 7.30 மணியளவில் டே மது அருந்தத் தொடங்கி, இரவு 10.30 மணியளவில் முடித்துவிட்டு, பின்னர் காரில் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 10 நிமிடங்களுக்குப் பிறகு, எங் நியோ அவென்யூவில் டே வாகனம் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, சிவப்புப் போக்குவரத்து விளக்கில் நின்றுகொண்டிருந்த டாக்சியின் மீது பலமாக மோதினார்.

இந்த மோதலின் தாக்கத்தால் டாக்சி சுழன்று சந்திப்பைத் தாண்டிச் சென்று நின்றது.

நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட டாக்சியின் கேமரா பதிவுகளில், டாக்சியின் மீது மோதுவதற்கு முன்பு டே தனது வாகனத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை என்பது தெரிந்தது.

72 வயதான டாக்சி ஓட்டுநர் மற்றும் 45 வயது பயணி ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். டாக்சி ஓட்டுநருக்குக் கழுத்து மற்றும் முதுகில் சுளுக்கு மற்றும் அவரது மார்பில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.

மூளையில் காயம் மற்றும் முகம், கழுத்து, விலா எலும்பு முறிவுகள் ஏற்பட்ட டாக்சி பயணி, கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு 210 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்துசிறைமதுபோதைகாயம்

தொடர்புடைய செய்திகள்