ஒரு எண்ணெய் விநியோக நிறுவனத்தில் மூத்த நிதி மேலாளராகப் பணியாற்றிய ஆடவர் அந்த நிறுவனத்தில் இருந்து டீசல் எண்ணெய்யை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோதமாகப் பலருக்கு நேரடியாக விற்று $1.1 மில்லியனுக்கு மேல் ஈட்டியுள்ளார்.
லீ வாய் கொங் என்ற அந்த 37 வயது மலேசிய ஆடவரின் மாத ஊதியம் $8,500 ஆகும். 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் மாதம் வரையில் அந்தக் கள்ளத்தனமான டீசல் விற்பனையால் அவருக்குக் கூடுதலாக $80,000 முதல் $100,000 வரை பணம் கிடைத்துள்ளது.
மேலும் 2025 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை அவரது சட்டவிரோத ஊதியம் மாதம் $150,000 முதல் $200,000 வரை உயர்ந்தது.
நம்பிக்கை மோசடி, குற்றச் செயலில் கிடைத்த பணத்தை பரிமாற்றம் செய்தல் ஆகிய இரு குற்றங்களுக்கும் அவருக்கு மூன்று ஆண்டுகள் ஐந்து மாதச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிப்பின்போது மேலும் இரு குற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
பிஎஸ் எனர்ஜி என்ற நிறுவனத்தில் அந்த ஆடவர் 2015 முதல் 2019 வரை பணியாற்றினார். பிறகு அவர் 2021ல் மீண்டும் அதே நிறுவனத்தில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளில் 2023ல் அவர் மூத்த நிதி மேலாளர் என்ற பதவி உயர்வு பெற்றார்.
அவரது பணிகளில் அங்கமாக, நிறுவனத்தில் இருப்பில் இருந்த டீசல் எண்ணெய்யின் அளவை தணிக்கை செய்வதும் அடங்கும். அந்த கணக்கு வழக்குகளின் முழு விவரங்களும் கட்டுப்பாடும் அவரது பொறுப்பில் இருந்தன.
2023 மார்ச் மாதம் ரிக்கி என்று அறியப்படும் முன்னாள் ஊழியர் ஆடவரைத் தொடர்புகொண்டு மீண்டும் தம்மை அந்நிறுவனத்தில் பணியமர்த்தும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு உதவுவதற்கு கைமாறாக பல எண்ணெய் விநியோகம் செய்வோரின் தகவல்களை ஆடவர் கேட்டுள்ளார்.
அந்தத் தகவல்களைக் கொண்டு அவர்களிடம் நேரடியாக எண்ணெய் விற்பனை செய்ய ஆடவர் திட்டமிட்டிருந்தார்.


