திருடப்பட்ட எரிபொருளைப் பெற தாம் வேலை பார்த்த நிறுவனத்துக்கு உதவிய அலுவலருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருடப்பட்ட 21,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எரிபொருளின் மதிப்பு 9.985 மில்லியன் அமெரிக்க டாலர் (S$13.58 மில்லியன்) என்று நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
54 வயது கோ கூன் யேன், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் 2017ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இக்குற்றத்தை 36 முறை, வெவ்வேறு சமயங்களில் புரிந்தார்.
அவருக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) நான்கு ஆண்டுகள், எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஷெல் ஈஸ்டர்ன் பெட்ரோலியத்தின் புலாவ் புக்கோம் ஆலையிலிருந்து திருடப்பட்ட எரிபொருளை சென்டெக் மரின் அண்ட் டிரேடிங் நிறுவனத்துக்குப் பெற்றுத் தர உதவியதை அவர் ஒப்புக்கொண்டார்.
திருடப்பட்ட எரிபொருளைப் பெற்றுத் தர உதவியதற்காக கோவுக்குக் குறைந்தது $222,600 வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தொகையை அவர் வங்கிக் காசோலை மூலம் விசாரணை அதிகாரியிடம் தாமாகவே முன்வந்து ஒப்படைத்துவிட்டார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய கோவின் சக ஊழியர்களில் சிலருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சென்டெக் நிறுவனத்தின் நிறுவனரான பாய் கெங் ஃபெங் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

