சிங்கப்பூரில் 2009ஆம் ஆண்டு பணிப்பெண் கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற மாசெல்லி அப் அஜீஸ், 55, என்ற பெண், பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
மூன்று ஆண்டுச் சிறைத்தண்டனை அனுபவித்த மாசெல்லி மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து மனிதவள அமைச்சிடம் பொய் சொல்லிப் புதிதாக ஒரு பணிப்பெண்ணைச் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தினார்.
2024ஆம் ஆண்டு மாசெல்லி, அங் மோ கியோவில் உள்ள நூருல் அஃபிதா அப்துல் கஃபார் என்பவருடன் சேர்ந்து சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார். அதன்படி, அஃபிதாவுக்குப் பணிப்பெண் வேண்டும் என்று வேலை அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால் அந்தப் பணிப்பெண் செம்பவாங்கில் உள்ள மாசெல்லியின் வீட்டில் வேலை செய்தார்.
வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துவதற்கான சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை மாசெல்லி ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவருக்குப் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) ஏழு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பத்தில் மனிதவள அமைச்சிடம் பொய் சொன்னால் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, $20,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.


