விமானப் பணியாளரை மானபங்கம் செய்தவருக்குச் சிறை

விமானப் பணியாளரை மானபங்கம் செய்தவருக்குச் சிறை

2 mins read
c5c2312e-f942-490f-a07e-ce5aeacd9db7
சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி நிகழ்ந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விமானப் பணியாளராக வேலை செய்யும் பெண்ணை மானபங்கம் செய்த ஆடவருக்கு ஆறு மாதச் சிறைத்தன்டணை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடவர், பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் உணவறையில் அப்பெண்ணுக்குத் தொந்தரவும் இழைத்திருக்கிறார்.

இழப்பீடு

குற்றவாளியான ஆகா‌ஷ் திவாரி $1,270.95 இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் திங்கட்கிழமை (ஜூன் 22) உத்தரவிடப்பட்டது. அத்தொகையை வழங்காவிட்டால் அவர் கூடுதலாக ஐந்து நாள்கள் சிறைத்தண்டனையை நிறைவேற்றவேண்டும்.

35 வயது திவாரி, மானபங்கம் செய்ததாகவும் தொந்தரவு இழைத்ததாகவும் தன்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்தியாவைச் சேர்ந்த அவர், கடந்தப் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தில் நண்பர்கள் நால்வருடன் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஒழுங்கின்றி நடந்துகொள்ள ஆரம்பித்தனர்.

பெண் விமானப் பணியாளர்கள் அவ்வழியே நடந்துசெல்லும்போது அவர்கள் கண்டபடி சிரித்துக் கைகாட்டியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் லிண்டா லீ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட விமானப் பணியாளர் விமானம் புறப்படுவதற்கு முன்பு உணவுத் தெரிவு குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சென்றிருக்கிறார். அப்போது ஆகா‌ஷ் தனது கையால் அவரை உரசியிருக்கிறார். அப்போது அவரின் நண்பர்கள் அதைப் பார்த்து சிரித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண், தலைமை விமானப் பணியாளரிடம் இதைப் பற்றித் தெரியப்படுத்தினார். பின்னர் அவர் விமானத்தின் வேறு பகுதிக்கு இடம் மாற்றப்பட்டார்.

ஆனால், அவர் பயணிகள் உண்டு முடித்த பிறகு தட்டுகளை எடுத்துக்கொண்டிருந்தபோது ஆகா‌ஷ் மறுபடியும் தனது கைவரிசையைக் காண்பித்தார்.

தவறை ஒப்புக்கொள்ளவில்லை

இதுகுறித்து தலைமை விமானப் பணியாளரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஆகா‌ஷைக் கேள்வி கேட்கச் சென்றனர். ஆனால், அவர் தனது தவற்றை ஒப்புக்கொள்ளவில்லை.

சம்பவத்தைப் பற்றி தலைமை விமானப் பணியாளர் தனது மேலாளரிடமும் விமானியிடமும் தெரியப்படுத்தச் சென்றபோதும் ஆகா‌ஷ் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பின்தொடர்ந்து அவருக்கு மிக அருகாமையில் நின்றிருக்கிறார்.

அதற்குப் பிறகும் அகா‌ஷ் பெண்ணைப் பின்தொடர்ந்தார். இச்சம்பவத்தை மற்ற பயணிகள் பார்த்தனர். பின்னர் ஒருவழியாக ஆகா‌ஷ் அப்பெண்ணைத் தொந்தரவு செய்வதை நிறுத்தினார்.

விமானம் சிங்கப்பூர் வந்தடைந்தபோது ஆகா‌ஷ் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்