‘வேலை வாய்ப்புகள்’ குறித்த டெலிகிராம் உரையாடல் குழுவில் இணைந்த மலேசியர் ஒருவருக்குச் சட்டவிரோதப் பொருள்களைச் சேகரிக்குமாறு பின்னர் அறிவுறுத்தப்பட்டது. மோசடிக்கு ஆளான ஒருவரிடமிருந்து 1,600 தங்கக் கட்டிகளை அவர் சேகரித்தார்.
தங்கக் கட்டிகளின் மதிப்பு $412,000க்கும் அதிகம். மலேசியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்ட அவற்றை இன்னும் மீட்க முடியவில்லை.
அரசாங்க அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்பட்ட மோசடியில் சிக்கி, பணமோசடி வழக்கில் தாம் ஒரு சந்தேக நபர் என்று நம்பி ஏமாந்தார் 54 வயது சிங்கப்பூர்ப் பெண். அவருக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.
மோசடியின் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 39 வயது மலேசியரான துரா ராஜு சுப்ரமணியனுக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) 38 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சதித்திட்டத்தின் மூலம் இன்னொருவருக்கு ஆதாயம் கிடைக்க உதவிய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
வழக்கு
மலேசியாவில் உள்ள நண்பர் ஒருவர் மூலமாகச் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் குறித்து துராவுக்கு அறிமுகம் கிடைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு வேலைக்கும் $50 தரப்படும் என்றும் உணவு, போக்குவரத்துச் செலவுகளுக்காக நண்பருடன் பகிர்ந்துகொள்ள 1,600 ரிங்கிட் (ஏறக்குறைய $500) கொடுக்கப்படும் என்றும் துராவிடம் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, சிங்கப்பூருக்குள் நுழைந்து கிராஞ்சி எம்ஆர்டி நிலையத்திற்குச் செல்லுமாறு துராவுக்கு உத்தரவிடப்பட்டது.
நடுத்தர வயது சீன ஆடவரிடம் கடித உறையைப் பெற்று அதை மற்றொருவரிடம் கொடுக்குமாறு அவருக்குக் கூறப்பட்டது.
துரா, இன்னொரு பையைப் பெற்றுவந்தால் மலேசியா திரும்புவதற்குப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும் என்று அவரிடம் சொல்லப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்
பாதிக்கப்பட்டவரான 54 வயது சிங்கப்பூர்ப் பெண்ணிடமிருந்து அந்தப் பை மீட்கப்படவிருந்தது.
வங்கியின் மோசடித் தடுப்புப் பிரிவு என்று சொல்லப்படுவதிலிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்தது; அதில், அவர் அடையாளத் திருட்டுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறப்பட்டது.
S$5,400 மதிப்புள்ள மோசடிப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தைச் சட்ட அமைச்சிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உதவுவார்கள் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சின் மூத்த புலனாய்வு அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவரிடம் அழைப்பு மாற்றப்பட்டது. பெண் இப்போது பணமோசடி வழக்கில் சந்தேக நபராக உள்ளார் என்று அவர் கூறினார்.
பிடியாணையும் சொத்து முடக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் போலி ஆவணங்கள் பெண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர் பதற்றமடைந்தார்.
காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்ட மற்றொரு நபரிடம் அவர் பின்னர் மாற்றப்பட்டார். அந்த நபர், பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து $1 மில்லியனை அவரின் கடன் அட்டைக்கு மாற்றுமாறு கூறினார்.
பெண்ணும் அவ்வாறே செய்தார்.
முன்னுரிமை நிதிச் சரிபார்ப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, லிட்டில் இந்தியாவில் உள்ள முஸ்தபா சென்டரில், கடன் அட்டையைப் பயன்படுத்தி 2,000 கிராம் தங்கக் கட்டிகளை வாங்குமாறு அவரிடம் பின்னர் கூறப்பட்டது.
பிகே 1505 என்ற அடையாள எண்ணைக் கொண்ட பால கிருஷ்ணன் என்ற சீருடை அணியாத அதிகாரி, அவரிடமிருந்து தங்கக் கட்டிகளைப் பெற்றுக்கொள்வார் என்றும் பெண்ணிடம் கூறப்பட்டது. அவருக்கு துராவின் விவரமும் கொடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் அதற்கு இணங்கி, S$412,791 மதிப்புள்ள 1,600 24 காரட் தங்கக் கட்டிகளை வாங்கினார்.
பாதிக்கப்பட்ட பெண், தங்கக் கட்டிகள் அடங்கிய ஐந்து பைகளையும் துராவிடம் ஒப்படைத்தார். துரா காரில் மலேசியாவிற்குள் நுழைந்ததும் அந்தப் பைகளை ஓட்டுநரிடம் கொடுத்தார்.
போன ஆண்டு நவம்பரில் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது துரா கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 42 முதல் 44 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு கோரியிருந்தது. அவருக்கு 38 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றச்செயலின் மூலம் மற்றொருவர் ஆதாயம்பெற உதவியதற்காக, அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கக்கூடும்.

