ஆடவரின் முகத்தில் குத்தி எலும்பு முறிவு ஏற்படுத்தியவருக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 9) ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு $408 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் 39 வயது வோங் சுன் சியோங்கிற்கு உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆடவருக்கு வோங் காயம் விளைவித்ததுடன் அவரை வசைபாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் 2023 செம்டம்பர் 3ஆம் தேதியன்று பாண்டான் கார்டன்சில் உள்ள பவுன்சி பேரடைசில் நிகழ்ந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட ஆடவரின் பிள்ளையும் வோங்கின் மகனும் அங்குள்ள உள்ளரங்கு விளையாட்டுத் திடலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
தம்மைப் பெரியவர் ஒருவர் திட்டியதாக வோங்கின் மகன் அவரிடம் தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் அந்த 56 வயது ஆடவரை அணுகினர். அப்போது அந்த ஆடவர் தம் பிள்ளையுடன் அமர்ந்துகொண்டிருந்தார்.
ஆடவர் இருவர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த ஆடவரின் முகத்தில் வோங் குத்தினார். இதையடுத்து, அந்த ஆடவர் கீழே விழுந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட ஆடவருக்கு முகத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அவருக்கு 14 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.