நேர்மையற்ற முறையில் பணத்தைக் கையாடிய குற்றத்தின் தொடர்பில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்கு 12 வாரச் சிறைத்தண்டைன விதிக்கப்பட்டது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தனது வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாக மாற்றிய 9,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தொகையைத் திருப்பித்தர முகம்மது பஷீர் ஹனிஃப் முகம்மது, 27, மறுத்திருக்கிறார்.
2023 நவம்பர் 10ல் தவறுதலாக மாற்றப்பட்ட அந்தப் பணத்தை பஷீர், ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காகவும் தனது அன்றாடச் செலவுகளுக்கும் பயன்படுத்தினார்.
பண மாற்றத்திற்கு முன்பு அவரது வங்கிக் கணக்கில் எந்தப் பணமும் இல்லை என்று சேனல் நியூஸ்ஏஷியா பெற்றுள்ள நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் சார்பிலும் பிஓஎஸ்பி வங்கியின் சார்பிலும் நிதி அதிகாரி ஒருவர் பஷீரைப் பலமுறை அழைத்துப் பார்த்தும் பஷீர் எந்தப் பதிலையும் தரவில்லை.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரி, நவம்பர் 21ல் பஷீருக்கு மின்னஞ்சல் அனுப்பித் தொடர்பு கொண்டபோது பஷீர், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதால் தவறுதலான அந்தப் பணமாற்றத்தைப் பற்றித் தமக்கு எதுவும் தெரியவில்லை எனப் பதிலளித்தார்.
பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணையும் பல்கலைக்கழக முகவரியையும் தர மறுத்த பஷீர், இனிமேல் தன்னைத் தொடர்பு கொள்ளாதபடி அந்த அதிகாரியிடம் தெரிவித்தார்.
கையாடிய பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. இந்தக் குற்றத்திற்காகப் பஷீருக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
பஷீர் முதன்முறைக் குற்றவாளி என்பதைக் கருத்தில்கொண்ட நீதிமன்றம், அவருக்கு 12 வாரச் சிறைத் தண்டனையை விதித்தது.
வழக்கறிஞரின் பிரதிநிதித்துவமின்றி நீதிமன்றத்தில் காணொளி வழியாக முன்னிலையான பஷீர், தனக்கு நிதி நெருக்கடி இருப்பதாகத் தெரிவித்தார்.
மனைவியுடன் வாடகை வீட்டில் தங்குவதாகக் குறிப்பிட்ட பஷீர், செலவுகளைச் சமாளிக்கத் திண்டாடுவதாகவும் தான் இனிமேல் மீண்டும் இத்தகைய குற்றங்களைப் புரியப்போவதில்லை என்றும் கூறினார்.

