வேலையிடத்தில் தனது கணனியைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த தகவல்களை நண்பருடன் பகிர்ந்துகொண்ட போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிக்கு ஓராண்டு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிவசூரியா மணியம் கேசவல், 29, எனும் அந்த ஆடவருக்கு வியாழக்கிழமை (ஜூலை 2) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது அவர் போக்குவரத்து விசாரணைக் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிவந்தார்.
பிரேடன் ஓங் யிங் ஷான், 25, எனும் அவர் நண்பரின்மீது அப்போது காவல்துறை அறிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பின்னர் தன்னைப் பற்றி அதிகாரிகளிடம் புகாரளித்த பெண்ணுக்கு ஓங் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
குற்றங்கள் நிரூபணம்
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கணினி முறையைத் தவறாகப் பயன்படுத்தியதாக சிவசூரியாமீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளும் அதிகாரத்துவ ரகசியங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டன.
அதேபோல், ஓங் சட்டவிரோதமான முறையில் பிறரைப் பயமுறுத்தியதும் அதிகாரத்துவ ரகசியங்கள் சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததும் நிரூபிக்கப்பட்டன.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பிறகு ஓங் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி படகில் நாட்டைவிட்டு வெளியேறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கான கைதாணை இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்த மறுபரிசீலனை வரும் 14ஆம் தேதி நடைபெறும்.
தற்காலிகப் பணிநீக்கம்
சிவசூரியா 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் காவல்துறை முன்னதாக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. ஓங், சிவசூரியா இருவரும் 2019ஆம் ஆண்டிலிருந்து நண்பர்கள் என்பதும் சிவசூரியாவின் வேலையைப் பற்றி ஓங்கிற்குத் தெரிந்திருந்தது என்பதும் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
வாகன உரிமமின்றி ஓங் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்ததாக அவரின் காதலராக இருந்த பெண், அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அந்தப் பெண் அளித்த தகவலைக் கொண்டு வேறு இரு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் 2022 ஜூலை மாதம் 12ஆம் தேதி ஓங்கைப் பிடித்தனர்.
உள்துறை அமைச்சின் கணினி முறையைப் பயன்படுத்தி சிவசூரியா அந்தப் பெண்ணின் தனிப்பட்ட தகவல்களையும் அவர் ஓங்குக்கு எதிராக அளித்த புகாரையும் மீட்டெடுத்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. அத்தகவல்களைக் கொண்டு அந்தப் பெண்தான் தன்மீது புகாரளித்தார் என்பதை ஓங் கண்டுபிடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

