நீச்சல்குளத்தில் கார் இறங்கிய வழக்கு: ஓட்டுநருக்கு இரண்டு வாரச் சிறை

நீச்சல்குளத்தில் கார் இறங்கிய வழக்கு: ஓட்டுநருக்கு இரண்டு வாரச் சிறை

1 mins read
ebd7573a-bbba-4d12-8b60-16430147e421
2023 பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 9 மணியளவில் ‘ஹில்சைடு’ தனியார் கூட்டுரிமை வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் சீன் டக் ஹெங் காரை இறக்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் வாடகை கார் ஒன்று வழிதவறி நீச்சல் குளத்திற்குள் இறங்கிய வழக்கில் அந்தக் கார் ஒட்டுநருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சீன் டக் ஹெங், 67, ஒப்புக்கொண்டார்.

அப்பர் புக்கிட் தீமா சாலையிலுள்ள ‘ஹில்சைடு’ தனியார் கூட்டுரிமை வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் இச்சம்பவம் இவ்வாண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 9 மணியளவில் நடந்தது. 

சம்பவத்தன்று அந்தக் காரில் மலேசியாவைச் சேர்ந்த 78 வயது வசந்தா குமரன் பயணம் செய்தார் என்றும் அவர் தன் மகளையும் பேத்தியையும் பார்ப்பதற்காகச் சிங்கப்பூர் வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தின்போது நீச்சல் குளத்தை யாரும் பயன்படுத்தவில்லை எனவும் அந்தக் கூட்டுரிமை வீட்டுக் காவலாளிகள் இருவர் கொடுத்த அறிவுறுத்தல்களை அந்த ஓட்டுநர் பின்பற்றாததால் இந்த விபத்து நடந்தது எனவும் கூறப்பட்டது.

நீச்சல் குளம் எனப் பயணி அலறியபோதும், அது நீச்சல்குளமன்று, தரையில் உள்ள மழைநீர் என்று சொல்லிக்கொண்டே வாகனத்தைக் குளத்திற்குள் ஓட்டுநர் இறக்கினார் எனச் சொல்லப்பட்டது.

காரின் முன்பகுதி நீச்சல் குளத்தில் இறங்கியவுடன், விரைந்து செயல்பட்ட அந்த மூதாட்டி, காரின் கதவைத் திறந்து வெளியேறினார்.

குறிப்புச் சொற்கள்