பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு கிட்டத்தட்ட $714,000 ஏமாற்றியதாக 50 வயது ரஃபிக் ஷமூன் ஓமர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அவர் தன்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை ஒப்புக்கொண்டார். அவருக்கு மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்மீது சுமத்தப்பட்ட மேலும் 3 குற்றச்சாட்டுகளும் தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
ரஃபிக் தன் நண்பரையும், தன் பக்கத்து வீட்டில் வசிப்பவரையும் ஏமாற்றி அவர்களுக்குப் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதும் அந்த ஆடவர் புரிந்த மோசடிகளில் அடங்கும்.
ரஃபிக் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான ‘யம்சியின்’ இயக்குநராகவும் அந்நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்தார்.
அவர் தன் பிள்ளையுடன் பயிலும் சகமாணவரின் பெற்றோரான திரு மேத்திஜ் கெர்பென் வான் தர் காக் என்பவரை 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘ஏர்பிஎன்பி’ நிறுவனத்தின் 13,500 பங்குகளை வாங்கித் தருவதாகக் கூறி அவரிடமிருந்து US$155,520ஐ பெற்றுள்ளார்.
ஆனால், ரஃபிக்கால் அந்தப் பங்குகளை வாங்க முடியாது என்பதை மேத்திஜ் அறியவில்லை.
அதே ஆண்டு ‘க்ளவுடெரா’ என்னும் மென்பொருள் நிறுவனத்தின் 15,000 பங்குகளை US$243,300க்கு வாங்கும்படி அவரை ரஃபிக் வற்புறுத்தியதாகவும் அதற்கான பணத்தையும் ரஃபிக்கின் வங்கிக் கணக்கில் மேத்திஜ் செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திரு மேத்திஜ், 2015ஆம் ஆண்டு மே மாதம் ரஃபிக் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அப்போது, ரஃபிக் கிட்டத்தட்ட $137,000ஐ மேத்திஜிக்குத் திருப்பித் தந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதே முறையில் அவர், 2018ஆம் ஆண்டுத் தன் பக்கத்து வீட்டில் வசிப்பவரான திரு ஸ்டீவ் கிம் யூன்சூவுக்கு ‘கார்பன் பிளாக் என்னும் அமெரிக்க நிறுவனத்தின் பங்குகளை வாங்கித் தருவதாக US$25,500யைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.
இது குறித்துத் திரு. கிம், 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

