தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையரை ஏமாற்றிப் பணம் பறித்தவருக்குச் சிறை

2 mins read
63682a02-7092-4fa4-affe-a549858adfe7
22 வயது டான் ஷி ரென், பெண்ணாக நடித்துப் பாலியல் சேவைகள் வழங்குவதாகப் பொய் சொல்லி இளையரிடம் $190 பணம் பறித்தார். - படம்: இணையம்

டெலிகிராம் தகவல் தளத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவி போல் நடித்து 17 வயது இளையரை ஏமாற்றி $190 பறித்த குற்றத்துக்காக ஆடவர் ஒருவருக்கு ஆறு மாதங்கள், ஐந்து நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 22 வயது டான் ஷி ரென் ஒப்புக்கொண்டார்.

பாலியல் சேவைகள் வழங்குவதாகப் பொய் சொல்லி அந்த இளையரிடம் டான் பணம் பறித்தார்.

அதுமட்டுமல்லாது, உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யப்போவதாகக் கூறி, அந்த இளையரின் சிங்பாஸ் விவரங்களை டான் பெற்றுக்கொண்டார்.

அந்த சிங்பாஸ் விவரங்களைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத ஒருவர் மூன்று வங்கிக் கணக்குகளைத் திறந்தார். அவற்றின் மூலம் $105,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன.

அவற்றில் $61,500க்கும் அதிகமான தொகை மோசடி மூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்பாஸ் விவரங்களைத் தந்தால் $6,000 கொடுக்கப்படும் என்று டெலிகிராம் செயலி மூலம் அடையாளம் தெரியாத ஒருவர் தெரிவித்ததாக டான் கூறினார்.

டான், தமது சிங்பாஸ் விவரங்களைக் கொடுக்காமல் இளையரை ஏமாற்றி அவரது சிங்பாஸ் விவரங்களைக் கொடுக்க வைத்ததாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

வெளிநாட்டு மாணவியாக நடித்து டெலிகிராம் செயலி மூலம் அந்த இளையருடன் டான் தொடர்புகொண்டார்.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அவர்கள் இருவரும் டெலிகிராம் செயலி மூலம் ஒருவரையொருவர் தொடர்புகொண்டனர்.

பள்ளிக் கட்டணம், உணவு ஆகியவற்றுக்காகப் பாலியல் சேவை வழங்குவதாகப் பெண்ணாக நடித்து அந்த இளையரை நம்பவைக்க டான் பொய் கூறினார்.

இதை நம்பி அந்த இளையர் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியன்று $190 வெள்ளி பணம் அனுப்பினார்.

பாலியல் சேவைக்காக $170, உணவு வாங்க $20 தரப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி சந்திப்பதாகச் சொல்லி அந்த இளையரை டான் ஏமாற்றினார்.

தம்முடன் தொடர்புகொண்டு பணம் பெற்றுக்கொண்டவர் மோசடிக்காரராக இருக்கக்கூடும் என்று இளையருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், கைப்பேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் பதிவு செய்யுமாறு வங்கியிடமிருந்து அவருக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால், அந்த வங்கியில் அந்த இளையர் வங்கிக் கணக்கு ஏதும் திறந்திருக்கவில்லை.

அதுகுறித்து அவர் வங்கியிடம் விசாரித்தார்.

தமது பெயரில் யாரோ ஒருவர் வங்கிக் கணக்கு திறந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, 2023ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியன்று அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

ஆறு நாள்கள் கழித்து டான் கைது செய்யப்பட்டார்.

ஏமாற்றிப் பறித்த $190 தொகையை அந்த இளையரிடம் டான் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்