சிறுமியை மானபங்கம் செய்த பாதுகாவல் அதிகாரிக்குச் சிறை

சிறுமியை மானபங்கம் செய்த பாதுகாவல் அதிகாரிக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Mar 2026 - 5:00 pm

1 mins read

சிங்கப்பூரில் உள்ள கூட்டுரிமைக் குடியிருப்பில் பாதுகாவல் அதிகாரியாக வேலை செய்த ஆடவர், 14 வயது சிறுமியை மானபங்கம் செய்துள்ளார்.

61 வயதான அந்தப் பாதுகாவல் அதிகாரிக்கு ஐந்து மாதங்கள் மற்றும் இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிநபர் அடையாளத்தைக் காக்கும் விதமாகக் குற்றவாளியின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை. அதேபோல் எந்தக் கூட்டுரிமைக் குடியிருப்பில் மானபங்கம் நடந்தது என்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

குற்றச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் நடந்தது.

சிறுமி பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பாதுகாவல் அதிகாரி அவரை தனது அறைக்கு அழைத்துள்ளார்.

தமது நண்பர்கள் நீச்சல் உடை அணிந்திராத நிலையில் அவர்களை நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதித்ததற்காக, காவல் அதிகாரி தன்னைத் திட்டுவார் என் நினைத்து அறைக்குள் சென்ற சிறுமியை அந்த அதிகாரி மானபங்கம் செய்தார்.

அதன்பின்னர் சிறுமி காவல்துறையில் புகார் கொடுத்தார்.

தீர்ப்பு விதிக்கப்படும்போது குற்றவாளிக்கு ஏழு மாதம் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று சிறுமியின் தரப்பினர் நீதிபதியைக் கேட்டுக்கொண்டனர்.

சிங்கப்பூரில் மானபங்கம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்