சட்டவிரோத ஒளிபரப்புப் கருவிகளை சிம் லிம் ஸ்குவேரில் விற்ற ஆடவருக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வகை குற்றத்துக்கான முதல் வழக்கு இதுவே.
‘டிஸ்னி’, ‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘பாரமவுண்ட் பிக்சர்ஸ்’, ‘பிரிமியர் லீக் காற்பந்துச் சங்கம்’ ஆகியவற்றுக்குச் சொந்தமான படைப்புகளின் பதிப்புரிமையை மீறியதாக அக்டோபர் 24ஆம் தேதி 37 வயது கெ ஸின், ஒப்புக்கொண்டார்.
இந்தச் சட்டவிரோதக் கருவிகளில் பிரபல ஆங்கிலத் திரைப்படங்களும் இபிஎல் ஆட்டங்களும் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.
பதிப்புரிமை பெற்ற படைப்புகளைச் சட்டவிரோதமாகப் பயனாளர்கள் பெறுவதற்கு இந்தக் கருவிகள் உதவும். கருவிகளை சிங்கப்பூரரான கெ ஸின் தமது இரு கடைகளிலும் விற்று வந்தார்.
பதிப்புரிமைச் சட்டத்தின்கீழ் கெ ஸின்னுக்கு மொத்தம் $300,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சிம் லிம் ஸ்குவேரில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரிகள் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடிச் சோதனைகளை அடுத்து கெ ஸின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சோதனையில் 2,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஒளிபரப்புப் கருவிகள் கைப்பற்றப்பட்டன.